பக்கம்:மேனகா 1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

மேனகா

ஒவ்வொரு காயமும் எவ்வளவு பெரிதாயிருந்ததென்னும் விவரத்தை சாமாவையர் சொல்லச் சொல்ல, அவர்கள் விம்மி விம்மி அழுதனர்; தமது முந்தானையால் வாயை மூடிக் கொண்டு பொருமியழுது, கண்ணிரைத்துடைத்துக் கொண்டனர். சிறிதும் அசைவின்றி வராகசாமி சவம்போலக் கிடந்தான். உடனே சாம்பசிவம் மனவுருக்கம் அடைந்து, “ஐயோ! ஏழரை நாட்டான் எல்லாரையும் ஒரே காலத்தில்தானா ஆட்டிவைக்க வேண்டும்? எனக்காயினும் உத்தியோகம் போனதோடு நின்றது; உமக்குத் தேகத்துன்பமா நேரவேண்டும்! பாவியாகிய எனக்கு நன்மையே நிலைப்பதில்லை. பத்து நாட்களுக்கு முன் மேனகாவை நீர் மிகவும் அன்பாக நடத்தி அரை நொடியும் அவளை விட்டுப் பிரியாது வாஞ்சையைக் காட்டியதைக்கண்டு என் மனம் எவ்வளவு பூரித்தது. உனக்கும் இவ்வளவு சந்தோஷமா என்று தெய்வமே அதைக் கண்டு பொறாமை கொண்டு என் வாயில் மண்ணைப் போட்டு விட்டதே! என்னுடைய திருஷ்டி தோஷமே உங்கள் இருவரையும் இப்படி அலங்கோலப்படுத்தி உங்கள் வாழக்கையைச் சின்னா பின்னமாக்கி யிருக்குமோ! அப்படிப்பட்ட துஷ்டக் கண் இப்போது ஏன் விசனப்படுகிறது” என்று பலவாறு தமக்குள் நினைத்து உருகினார். கனகம்மாள் வராகசாமியின் முகத்தருகினில் குனிந்து அன்பு ததும்ப, “மாப்பிள்ளை; மாப்பிள்ளை!” என்று இரண்டு மூன்று முறை கூப்பிட்டாள். அவன் அதை உணர்ந்ததாகத் தோன்றவுமில்லை; சிறிதும் அசைவற்றும், கண்திறவாமலும் முன்போலவே கிடந்தான்; கனகம்மாள், அப்போது அவனுக்கு எவ்வித உபசரணை செய்வதென்பதை அறியமாட்டாமல் தவித்தாள். புலிப்பால் தேவையென்றாலும், உடனே தருவிக்கவும், அவனது உயிர் எமலோகத்தின் வாசற்படியில் இருந்தாலும், அங்கு சென்று எமனுடன் முஷ்டியுத்தம் செய்து அவன் உயிரை மீட்டுவரவும் தக்க திறமை வாய்ந்த கனகம்மாள், அப்போது எப்பாடு படுவதாயினும், வராகசாமியின் நிலைமையில் சிறிய மாறுபாடும் தோன்ற வகையில்லை; மற்ற துன்பங்களாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/298&oldid=1251387" இலிருந்து மீள்விக்கப்பட்டது