பக்கம்:மேனகா 1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

281

இடிகளைத் தாங்கிய கனகம்மாள் அதைக் கண்டு சகிக்கமாட்டாமல் பதைபதைத்தாள்; தான் ஒன்றையும் செய்யமாட்டாமல் சும்மா நிற்பது அவளுக்குத் துன்பமயமாக இருந்தது. அன்பு என்னும் பெரும் பேய் மனதிற்குள்ளிருந்து ஓயாமல் இடித்து இடித்து அவளை ஊக்கிக்கொண்டே இருந்தது. கன்றுக்குக் கனிந்திறங்கும் பசுவைப்போல உள்ளம் உருகிநின்று, தன் வலதுகையை நீட்டி அவனுடைய கன்னத்தை மெல்லத்தடவி, “மாப்பிள்ளை! மாப்பிள்ளை!” என்றாள். திடீரென்று வராகசாமியின் கண்கள் திறந்து கொண்டன. ஆனால் விழிகள் பயங்கரமாக இருந்தன. பார்வை அங்கு நின்றவர்களின் மீது விழவில்லை. அவன் வேறு வெளியைப் பார்த்தான்; அவனுடைய மூளை நன்றாய்க் குழம்பிப் போயிருப்பதையும், அவன் தேகமுற்றிலும் பச்சைப்புண்ணா யிருப்பதையும் அவன் விழியின் குழப்பமும், ஒளியின்மையும் தெளிவாகக் காட்டின. அடுத்த நிமிஷத்தில் கண்களில் அயர்வு தோன்ற, இமைகள்தாமே மூடிக்கொண்டன. அப்போது அங்கு வந்த துரைஸானியாகிய தாதி யொருத்தி, “சந்தடி செய்யாமல் பார்த்துவிட்டுப் போங்கள். அவருடன் பேசக்கூடாது” என்று இங்கிலீஷ் பாஷையில் கீச்சுக்குரலில் அதிகாரத்தோடு கூறினாள். அதைக் கேட்ட கனகம்மாள் அடங்கிப் பின்வாங்கினாள்.

அதற்குள் சாமாவையர் வராகசாமிக்குப் பக்கத்தில் கழற்றி வைக்கப்பட்டிருந்த, அவனுடைய சொந்த உடையை மெல்ல எடுத்து அதிலிருந்த கடிதங்கள் இரண்டையும் படத்தையும் எடுத்து சாம்பசிவத்தினிடம் கொடுக்க அவர் மிகுந்த ஆலலோடு அவற்றை வாங்கி படத்தை உற்று நோக்கினார். அதைக் கண்ட கனகம்மாளும் அருகில் நெருங்கி அதைப் பார்த்தாள். விஷயம் இன்னதென்பது அவர்களுக்கு உடனே விளங்கவில்லை. மதிமயக்கங் கொண்ட சாம்பசிவம் ஒரு கடிதத்தை எடுத்துப் படித்தார்; பிறகு இன்னொன்றைப் படித்தார். கனகம்மாளும் அவருடன் கூடவே அவற்றைப் படித்துவிட்டாள். இருவரின் முகங்களும் சடக்கென்று மாறிவிட்டன; பிரேதக்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/299&oldid=1251389" இலிருந்து மீள்விக்கப்பட்டது