பக்கம்:மேனகா 1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

287

அடைந்தனர். சாமாவையர் கதவைத்தட்டினார். பதில் இல்லை. மேலும் ஓங்கி இடித்தார். அப்போதும் பதில் இல்லை; கை ஓயாமல் ஒரு நாழிகை வரையில் கதவில் தமது முஷ்டியை உபயோகப்படுத்தினார். அதன்பிறகு ஒருவன் கதவைச்சிறிதளவு திறந்து அதைக் கையில் பிடித்துக்கொண்டு வழிமறைத்து நின்று மிகவும் நிதானமாக சாம்பசிவம் முதலியோரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு இழுப்பான குரலில், “நீங்க எங்கேயிருந்து வறீங்க?” என்றான்.

உடனே சாமாவையர், “வீராசாமி நாயுடு இங்கேதானே குடியிருக்கிறார்?” என்று கேட்டார்.

கதவைத் திறந்த மனிதன், “என்ன சங்கதி? நீங்க எங்கயிருந்து வlங்க” என்று திரும்பவும் கேட்டான்; அவன் அவர்களைக் கண்டு பயந்துவிட்டான் என்பது நன்றாக விளங்கியது.

சாம்ப:- தஞ்சாவூரிலிருந்து வருகிறோம். நாயுடு தெரிந்தவர்; அவரைப் பார்த்துவிட்டுப் போகவேண்டும் - என்றார்.

அதைக்கேட்ட அந்த மனிதன் மறுமொழி யொன்றுங் கூறாமல் கதவைத் திரும்ப மூடி உட்புறம் தாளிட்டுக்கொண்டு போய் விட்டான்; வெளியிலிருந்த மூவருக்கும் அவனது நடத்தை வியப்பை உண்டாக்கியது; அவன் வருவானோ மாட்டானோ, வீராசாமி நாயுடு அந்த வீட்டில் இருக்கிறானோ இல்லையோ, மறுபடியும் கதவை இடிப்பதா கூடாதா வென்று பலவாறு எண்ணமிட்டுக்கொண்டு அரைநாழிகை நேரம் வெளியில் நின்றனர். அப்படி நின்றது சாம்பசிவத்திற்கு மிகவும் அவமானமாய்த் தோன்றியது; தேகமே கூசியது. என்ன செய்வார்? அது பெண்ணைப் பெற்றதன் பலனென்று நினைத்து நின்று வருந்திக்கொண்டிருந்தார். நல்ல வேளையாக அவன் திரும்பவும் கதவைத் திறந்தான். அவன் என்ன சொல்லப் போகிறானோவென்று மூவரும் அவன் வாயை நோக்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/305&oldid=1251401" இலிருந்து மீள்விக்கப்பட்டது