பக்கம்:மேனகா 1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

மேனகா

அவன், “அவுங்க, இப்பத்தான் எந்திருச்சாங்க; அப்பிடி ஒக்காருங்க; மொகங் கழுவிக்கின போறவால உள்ளற போவலாம்” என்று சொல்லிவிட்டுத் திரும்பவும் தாளிட்டுக் கொண்டு போய்விட்டு ஒரு நாழிகைக்குப் பிறகு வந்து கதவைத் திறந்து, “வாங்க உள்ளற” என்றான். மூவரும் உட்புகுந்தனர். பல தாழ்வாரங்கள், கூடங்கள், அறைகள் முதலியவற்றைக் கடந்து மூன்றாங் கட்டுக்குள் நுழைந்தனர். கண்டவிட மெல்லாம் கிழிந்த திரைகளும், ஒடிந்த நாற்காலிகளும், பல்லிளித்த பக்கப் படுதாக்களும், இடுப்பொடிந்த காட்சிகளும், மூங்கில்களும், கயிறுகளும், குப்பையும், செத்தையும், புகையிலைத் தம்பலங்களும், கிழிக்கப்பட்ட தீக்குச்சிகளும், குடித்து மிகுந்த சிகெரட்டுகளும், வாடிப்போன வெற்றிலைகளும் கிடந்தன. ஆண்களும், பெண்களும் மூலைமுடுக்குகளி லெல்லாம் அலங்கோலமாய்ப் படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கினர். முகத்தில் பூசப்பட்ட அரிதாரம் பாதி கலையாமலும், கடவாயைப் பெருகவிட்டும், உடைகளை இழந்தும் தாறுமாறாய்க் கிடந்தனர். எங்கும் துற்நாற்றம் சூழ்ந்து வயிற்றைப் புரட்டியது. சாம்பசிவம், கனகம்மாள் இருவரும் துணியால் மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு விரைவாக அப்புறம் நடந்தனர். “ஆகா! இந்த அழகைக் கண்டுதானா ஜனங்கள் ஏமாறி மோகிப்பது! இதன் பொருட்டா ஜனங்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் விரயம் செய்கிறார்கள்! இந்த விகாரங்களைக் கண்டுதானா குலஸ்திரீகள் தமது உயிராகிய கற்பையும், இம்மை வாழ்க்கையையும், தமது பெற்றோரையும், உற்றாரையும் இழந்து திண்டாடித் தெருவில் நிற்பது? இவர்களைப் பார்த்த கண்களைத் தண்ணீர் விடுத்தலம்பினும் அருவருப்புத் தீராது! கோரம்! கோரம்!” என்று நினைத்துக் கொண்டே மூன்றாங் கட்டில் நுழைந்தனர். அங்கிருந்த தனியான ஓரறையில் பாய் திண்டு முதலியவற்றின் மீது வீராசாமி நாயுடு உட்கார்ந்திருந் தான். ஒரு மூலையில் காப்பித் தண்ணீரும் கருத்த ஆப்பமும் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு புறத்தில் வெற்றிலை பாக்கு புகையிலை சிகரெட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/306&oldid=1251404" இலிருந்து மீள்விக்கப்பட்டது