பக்கம்:மேனகா 1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

மேனகா

தெரிவிப்பதில் கூட சுங்கம் பிடித்தான்.

சாம்ப:- உங்களுக்குத் தஞ்சாவூரில் நஷ்டம் வந்ததென்று சொல்லிக்கொண்டார்களே! இங்கே எப்படி இருக்கிறது? - என்றார்.

நாயுடுவின் சந்தேகம் நிச்சயமானது. உடனே மூக்கால் அழத்தொடங்கினான். “ஆமாம்! இராமேசுவரம் போனாலும் சநீசுவரன் விடாதென்கிறமாதிரி தன்னிழல் தன்னோடுதானே வரும். அங்கே நஷ்டப்பட்டேன்; இங்கே பொருளை வாரி எடுக்க வந்தேன். இங்கே பெரிய அவக்கேடு சம்பவித்தது; என்ன செய்கிறது? அதிர்ஷ்டமில்லை” என்றான். சாம்பசிவம் மிகவும் அநுதாபங்காட்டி, “அடாடா! என்ன அவக்கேடு வந்தது? சொல்லக்கூடியதுதானே?” என்றார்.

வீரா:- எங்களிடத்தில் மாயாண்டிப்பிள்ளை யென்று ஒரு புகழ் பெற்ற ராஜா வேஷக்காரன் இருந்தான். அவன் திடீரென்று ஒரு வாரத்திற்கு முன் எங்கேயோ ஒடிப்போய்விட்டான். அவன் போனது மட்டுமின்றி ஐந்நூறு ரூபா பெறுமான உடுப்புகளையும், நகைகளையும் எடுத்துக்கொண்டு நல்ல சமயத்தில் போய்விட்டான். வேறு சரியான ராஜா வேஷக்காரன் இல்லாமையால், பண வசூலே கிடையாது; சோற்றுக்கும் திண்டாட்டமாய் விட்டது - என்றான்.

சாம்ப:- ஐயோ பாவம்! அவன் ஏன் போய்விட்டான்? சம்பளம் குறைவென்று போய்விட்டானோ? -

நாயுடு:- அப்படி யொன்றுமில்லை. அவனுக்குச்சாப்பாடு போட்டு மாதம் இருநூறு ரூபா கொடுத்தேன். நான் அதில் குறைவு வைக்கவில்லை; இங்கிருந்தால் அவனும் பிழைத்துப் போகலாம்; நாங்களும் தலையெடுப்போம். தலைச்சுழி யாரை விட்டது.

சாம்ப:- அப்படியானால், அவன் ஏன் ஒடினான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/308&oldid=1251406" இலிருந்து மீள்விக்கப்பட்டது