பக்கம்:மேனகா 1.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

293

கீழே உட்கார்ந்து அதன் இரண்டு காதுகளையும் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டான்; அவன் ஒருக்கால் அதன் காதில் ஏதேனும் இரகசியமான மந்திரம் சொல்லி அதை எழுப்பப் போகிறானோ வென்று பிறர் சந்தேகிக்கத் தக்கதாக அந்த நிலைமை காணப்பட்டது. ஆனால், அவன் குதிரையின் இரண்டு காதுகளையும் இறுகப் பிடித்துக்கொண்டு, பாறையில் மட்டையை உடைக்க இளநீரை மோதுதல்போல் ஓங்கி அதன் முகத்தைத் தரையில் ஏழெட்டுமுறை மோத கிழக்குதிரை வீர் என்று கதறிக்கொண்டெழுந்தது. அதன் உடம்பில் விபரீதமான சுறுசுறுப்புண்டாயிற்று. மோவாயும், உதடுகளும், பற்களும், வாயிலிருந்த கடிவாளமுள்ளும், இரத்தப் பெருக்கும் ஒன்றுசேர்ந்து தக்காளிப் பழமாய் நசுங்கி உருவமற்று ஒரே மொத்தையாகத் திரண்டு காய்ந்த பேரீச்சம் பழம்போலாயின; குதிரை சாகவும் மாட்டாமல், சகிக்கவும் மாட்டாமல் தவித்து மரண வேதனைப்பட்டது. தான் வண்டியில் ஏறும்போது தூங்கிய பெரும் பிழைக்காக குதிரையைத் தான் தக்கபடி தண்டித்து விட்டதாக நினைத்துத் தனது மார்பை பெருமையோடு பார்த்துக்கொண்ட சாயப்பு மூவரையும் நோக்கி, “ஏறுங்க ஸாமி! போகலாம்” என்று மரியாதையாக அழைத்தான். சாமாவையரும், பெரிதும் களைப்படைந்து தம்மை முற்றிலும் மறந்திருந்த மற்றிருவரும் வண்டியில் ஏறிக்கொண்டனர்.

அதற்குள் அந்தத் தெருவில் இரண்டொரு வீட்டு வாயில்கள் திறக்கப்பட்டிருந்தன. எதிர்த்த வீட்டுத் திண்ணையில் நாலைந்து சோம்பேறிகள் உட்கார்ந்து சிகரெட்டுப் பிடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர். அவர்கள் நால்வரும் இருபது முதல் முப்பது வயது வரையில் அடைந்த யெளவனப் புருஷர்கள். அவர்கள் அந்தத் தெருவிலுள்ள பரத்தையர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் புருஷரைத் தேடிவந்து பிழைப்புக்கு வழி செய்யும் பேருபகாரிகள். அவர்களுடைய அலங்காரங்களோ, அவர்கள் மிக்க கண்ணியமான பெரிய மனிதர்கள் என்பதைச் சுட்டின. ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/311&oldid=1251410" இலிருந்து மீள்விக்கப்பட்டது