பக்கம்:மேனகா 1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

301

சாம்பசிவம் படித்தார். எதிர்பாராமல் பீரங்கி குண்டு மார்பில் பாய்ந்து அவருடைய உடம்பையே தகர்த்து சின்னாபின்னமாக்கிவிட்டதைப் போல தமது மனத்தில் எழுந்த விசனத்தையும் ஆத்திரத்தையும் தாங்கமாட்டாமல் பைத்தியங்கொண்டவரைப்போல ஆகாயத்தில் துள்ளிக்குதித்தார். பல வீடுகளுக்கு ஒசைகேட்கும்படி “அம்மா” வென்று வீரிட்டுக்கத்தினார். அந்த விபரீதக் கோலத்தைக் கண்ட கனகம்மாள் திக்பிரமை கொண்டு தண்ணீர் ஒழுகிய வஸ்திரத்தோடும் உடம்போடும் “என்ன! என்ன!!” வென்று கேட்டுக்கொண்டே ஓடிவந்தாள். சாம்பசிவம் தந்தியின் கருத்தை இரண்டொரு வார்த்தையில் தெரிவித்துவிட்டு வெளியில் ஒடி மிகவும் அவசரமாக இரயிலுக்குப் போகவேண்டும் என்றும், வண்டியைத் தயாரிக்கும்படியும் சாயுபுவிடம் கூறிவிட்டு உள்ளே ஓடிவந்து அம்மாளையும் அழைத்துக்கொண்டு வெளிப்பட்டார்; மேனகாவையும், வராகசாமியையும், தமது உத்தியோகத்தையும், உலகத்தையும் மறந்தார். சாமாவையரையும் நடையிலிருந்த காப்பியையும், இடையில் பிழி படாமையால் ஜலம் சொட்டிய வஸ்திரத்தையும் கவனிக்காமல், இருவரும் வெறி கொண்டவரைப்போல ஒடி வண்டியில் உட்கார்ந்து கொண்டு, “எழும்பூருக்கு ஒட்டு” என்றனர். மிகவும் தயாளமான மனத்தைக் கொண்ட சாயப்பு அவர்களது கோலத்தைக் கண்டு வேறு பக்கத்தில் தனது முகத்தைத் திருப்பி கலகலவென்று சிரித்தவனாய் வண்டியிலேறிக்கொண்டான். அவ்வளவோடு அவர்கள் தன்னை விட்டுவிடுவார்களென்று நினைத்து வண்டியை ஒட்ட ஆரம்பித்தான். கொள்ளிருந்த பை, வாயை விட்டுப் போய் விட்டதே என்று ஏக்கங் கொண்ட நமது நீலவேணிக் குதிரை திரும்பவும் புறப்பட்டது. ஒன்றையும் அறியாமல் திகைத்த சாமாவையர் வெளியில் ஓடிவந்தார்; அதற்குள் வண்டி நெடுந்துரம் போய்விட்டது.


❊ ❊ ❊ ❊ ❊
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/319&oldid=1251427" இலிருந்து மீள்விக்கப்பட்டது