பக்கம்:மேனகா 1.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

மேனகா

பார்த்தார்.

“சென்னை திருவல்லிக்கேணி தொளசிங்கப்ருெமாள் கோவில் தெருவிலிருக்கும் வக்கீல் வராகசாமி வீட்டில் வந்திருக்கும் தஞ்சை டிப்டிகலக்டர் சாம்பசிவலயங்காரவர்களுக்கு” என்ற மேல் விலாசம் அதன் மேல் காணப்பட்டது. தஞ்சை கலெக்டரிடத்திலிருந்து அது வந்திருக்கலாமென்று நினைத்த சாமாவையர், அதை எடுத்துக்கொண்டு குழாயண்டையில் ஒடி, “அண்ணா! உங்களுக்குத் தஞ்சாவூரிலிருந்து ஒரு தந்தி இன்று காலையில் வந்ததாம். வாங்கி வைத்திருக்கிறாள்” என்று கூறி உறை மூடிக்கொண்டிருந்த தந்தியைக் காட்ட, அதை எதிர்பாராத சாம்பசிவம் திடுக்கிட்டு, “யாருக்கு? எனக்கா? எங்கிருந்து வந்திருக்கிறது? இப்படிக் கொடும்” என்று பதைபதைத்தவராய், பாதி நனைந்தும் நனையாததுமாயிருந்த இடைத் துணியோடு பாய்ந்து வந்து அதை வாங்கி உடைத்து அது யாரிடத்திலிருந்து வந்தது என்பதை முதலில் பார்த்தார். “கிட்டன்” என்று கையெழுத்துசெய்யப்பட்டிருந்தது. உடனே அவரது மனது எண்ணாத தெல்லாம் எண்ணியது. அந்த ஒரு நிமஷமும் நான்கு யுகங்களாய்த் தோன்றியது. அவர் விஷயத்தைப் படித்தார். அது அடியில் வருமாறு எழுதப்பட் டிருந்தது. - “நீங்கள் பட்டணம் போனபின், “நேற்று ராத்திரி பன்னிரண்டு மணிக்கு நம்முடைய வீட்டிற்குள் தீவெட்டிக் கொள்ளையர்கள் முப்பது பேர்கள் நுழைந்து என்னையும் அக்காளையும் அடித்துப் போட்டுவிட்டு நகைகள், பணங்கள், துணிகள், பாத்திரங்கள் பெட்டிகள் மேஜை நாற்காலிகள் முதலிய எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். எனக்கு ஒரு கோவணமும் அக்காளுக்கு ஒரு சிறிய கிழிந்த புடவைத் துண்டமும் கொடுத்துவிட்டு ஒரு துரும்புவிடாமல் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அக்காள்மேல் இருந்த நகைகளைப் பிடுங்கியதில் காது மூக்கு முதலியவற்றை அறுத்துவிட்டதோடு பச்சைப் புளியந்தடியால் அவளை அடித்துவிட்டனர். அவள் செத்தவள் போலவே கிடக்கிறாள். பிழைப்பது கடினமென்று டாக்டர் சொல்லுகிறார். நீங்கள் உடனே வராவிட்டால் அவளைக் காணமுடியாது. தந்திக்குப் பணமும் கட்டிக்கொள்ளத் துணிகளும் சேவக ரெங்கராஜு கொடுத்தான்” என்று எழுதப்பட்டிருந்த தந்தியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/318&oldid=1251426" இலிருந்து மீள்விக்கப்பட்டது