பக்கம்:மேனகா 1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

299

விட்டு, வாயிற்கதவை மூடித் தாளிட்டுவிட்டு, அவற்றை நிவேதனங் கொண்டருளும்படி சாம்பசிவத்தை வேண்டினார். அவர் தமக்கு “வேண்டாம் வேண்டாம்” என்று மறுக்க, சாமாவையர், “இல்லை, இல்லை; கொஞ்சம் ஆகட்டும், ஆகட்டு” மென்று வற்புறுத்தினார்; சாம்பசிவம், “எனக்கு உடம்பெல்லாம் அசுசியா இருக்கிறது. ஸ்நானம் செய்த பிறகு பார்த்துக்கொள்வோம்” என்று கூறிவிட்டு காப்பியை மாத்திரம் அருந்தும் எண்ணத்துடன் எழுந்து தண்ணீர் குழாயண்டையில் சென்று இடையின் வஸ்திரத்தை நனைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யத் தொடங்கினார். பாதிவழி தூரம் கீழே நடந்து, தானே குதிரையையும் இழுத்துக்கொண்டு வந்த பச்சாமியான் வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரையை அவிழ்க்காமலே வேகவைக்கப்பட்ட கொள் நிறைந்த பையை அதன் வாயிற் கட்டிவிட்டு, வண்டியின் பெட்டிக்குள் விருந்த ஒரு ரொட்டியை எடுத்துக்கடித்து இழுத்து, அதிலிருந்து கொஞ்சமும் பிய்க்கமாட்டாமல் கைக்கும் வாய்க்கும் பெருத்த தகராறு உண்டாக்கிவிட்டான். அந்த ரொட்டி அவன் மனதைக் காட்டிலும் அதிகமாக இறுகிப்போயிருந்தது.

அப்போது சமையலறைக்குள்ளிருந்த சாமாவையருடைய மனைவி மீனாட்சியம்மாள் ஏதோ ஒரு அவசரமான விஷயத்தை நினைத்துக்கொண்டவளாய் அதைத் தனது கணவரிடம் தெரிவிக்க நினைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள். சாமாவையர் தாழ்வாரத்தில் நின்றுகொண்டு வேறு பக்கத்தில் தமது கவனத்தைச் செலுத்தியிருந்தார். சாம்பசிவம் முதலிய அயலார் இருந்தமையால், மீனாட்சியம்மாள்தன் கணவனைக் கூப்பிட வெட்கியவளாய் சூ சூ வென்று மூஞ்சூறு கத்துவதைப்போல உதட்டால் ஓசை செய்ய, அதையுணர்ந்த ஐயர் அவளிடம் சென்றார். மிகவும் சாந்தமாக அவள் அவருடைய செவியில், “காலை 9-மணிக்கு ஒரு தந்தி வந்ததாம். அதைப் பெருந்தேவியம்மாள் கொடுத்துவிட்டுப்போனாள்; அதை வாங்கிப்புரையில் வைத்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு விளக்கெண்ணெய் வழிந்த ஒரு மாடத்தைக் காட்டினாள். சாமாவையர் விரைந்து சென்று மாடத்தில் எண்ணெயில் நனைந்து கிடந்த ஒரு தந்தியை எடுத்து மேல் விலாசத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/317&oldid=1251425" இலிருந்து மீள்விக்கப்பட்டது