பக்கம்:மேனகா 1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

மேனகா

என்று உட்கார்ந்தார்; வாயிற்கதவை அரைப்பாகம் மூடிவிட்டு அதன் மறைவில் கனகம்மாள் கீழே உட்கார்ந்துகொண்டாள். சாமாவையர் தடதடவென்று உள்ளே ஓடினார்.

உட்கார்ந்த இருவருக்கும் களைப்பு வந்து மேலிட்டது; தேகத்தின் அங்கங்கள் யாவும் ஈயகுண்டுகளைப்போலப் பெருஞ் சுமைகளாக அழுத்தின. உட்கார்ந்த மாத்திரத்திலேயே அவர்கள் பிரம்மாநந்த போக அநுபவிப்பவரைப்போல ஒத்தனர். ஆனால், அவர்களது மனமொன்றே மேற்செய்ய வேண்டுவதைப்பற்றித் துடிதுடித்தது. உள்ளே ஒடிய சாமாவையர் ஐந்து நிமிஷ நேரத்திற்குள் காப்பியும் உப்புமாவும் தயாரிக்கும்படி தமது மனைவியிடம் கூறிவிட்டு அங்கிருந்த சமையற் பாத்திரங்களைக் கொணர்ந்து முற்றத்திலிருந்த கிணற்றடியிற் போட்டுவிட்டு நடைக்கு வந்து, “பாட்டியம்மா! எழுந்து வாருங்கள்; சாயுங்காலமாய் விட்டது. பாத்திரங்ளை தயாராக வைத்திருக்கிறேன். எழுந்து கொஞ்சம் சமையல் செய்துகொள்ளுங்கள். ராத்திரி முதல் பட்டினியல்லவா? வாருங்கள் காப்பி தயாராகிறது; சமையலாவதற்குள் அண்ணா கொஞ்சம் காப்பி சாப்பிடட்டும்” என்று கூறிவிட்டு உள்ளே ஓடினார். அதற்குள் அவர்களுடைய தேகம் அசைக்கவும் வல்லமையற்று ஒய்ந்து போனது. அவர்களுடைய உயிர் எந்த உலகத்திலிருந்ததோ வென்பது அவர்களுக்கே விளங்கவில்லை. மனமோ மேனகா வராகசாமி தஞ்சை கலெக்டர் ஆகிய மூவரிடத்திலும் சென்று சென்று மாறி மாறிப் பிரதட்சணம் செய்துகொண்டிருந்தது. சாம்பசிவம், “அம்மா! எல்லாவற்றிற்கும் நீ கொஞ்சம் ஆகாரம் தயார் செய். மேலே பல இடங்களுக்குப் போய் பார்க்கவேண்டியிருக்கிறது. உன்னாலும் இனி மேல் பசி தாங்கமுடியாது” என்றார். அம்மாள் அருவருப்போடு, “எனக்கு ஆகாரமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். ஸ்நானம் செய்தால், களைப்பு தீர்ந்துபோகும், அதை மாத்திரம்தான் செய்யப்போகிறேன்; நீ காப்பியைச் சாப்பிடு” என்று சொல்லி விட்டு எழுந்து கிணற்றடிக்குச் சென்று நீராடத் துவங்கினாள். அதற்குள் சாமாவையர் கூஜாவில் காப்பியும் ஒரு தட்டில் உப்புமாவும் எடுத்துக்கொண்டு ஓடிவந்து நடைத்திண்ணையில் வைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/316&oldid=1251424" இலிருந்து மீள்விக்கப்பட்டது