பக்கம்:மேனகா 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மேனகா


கோமளம்:- ஏனடி அக்காள்! வரவர உன் கை தேறி விட்டதே! இப்போது செய்துவைத்த அப்பளம் நம்முடைய வராகசாமியினுடைய சாந்தி முகூர்த்தத்தில் டிப்டி கலெக்டர் அகத்தில் (வீட்டில்) பொறித்த அப்பளத்தைப் போலிருக்கிறதே! - என்று கூறி நகைத்துப் பரிகாசம் செய்தாள். அதைக் கேட்ட பெருந்தேவியம்மாள், “நன்றாயிருக்கிறது! அந்த பிணங்களுக்கு மானம் வெட்கம் ஒன்றுமில்லை; பணம் ஒன்றுதான் பிரதானம்; அந்தச் சபிண்டிக்கு டிப்டி கலெக்டர் உத்யோகம் என்ன வேண்டியிருக்கிறது! ஆண், பெண் அடங்கலும் நித்திய தரித்திரம். அவர்களுடைய முகத்தில் விழித்தாலும், அவர்களுடைய தரித்திரம் ஒட்டிக்கொள்ளும்” என்றாள்.

கோமளம்:- ஏனடி அக்காள்! அப்படிச் சொல்லுகிறாய்? அவனுடைய அகமுடையாள் தங்கம்மாள். தாயார் கனகம்மாள்(கனகம் என்றால் தங்கம்) இரண்டு தங்க மலைகளிருக்க, டிப்டி கலெக்டரை தரித்திர மென்கிறாயே! - என்றாள்.

பெருந்தேவி:- (நகைத்து) ஆமாம். குடிக்கக்கூழில்லாதவள் சம்பூரண லட்சுமி யம்மாளென்று பெயர் வைத்திருப்பதைப் போலிருக்கிறது. நம்முடைய வராகசாமிக்கு சோபன முகூர்த்தத்தின் போது டிப்டி கலெக்டர் இரண்டாயிரம் ரூபா கொடுத்தானே; அதற்குப் பதிலாக தங்கத்தையாவது; கனகத்தையாவது சீராக அழைத்து வந்திருக்கலாமே. டிப்டி கலெக்டரும் இரண்டாயிரம் ரூபா லாபமாவதை நினைத்து இருவரில் ஒருத்தியை சந்தோஷமாக அனுப்பி யிருப்பானே.

கோமளம்:- நம்முடைய வராகசாமியா ஏமாறுகிறவன். அவன் தங்கம்மாளைத்தான் கேட்டிருப்பான் - என்று கைகொட்டி நகைத்து ஊஞ்சலை விசையாக ஆட்டினாள்.

பெருந்தேவி சிறிது வெறுப்போடு, “ஆமாம்; சின்ன பீடை வந்து குடும்பம் நடத்தித்தான் குப்பை கொட்டி விட்டாளே. பெரிய பீடை வந்துவிட்டால் அக்காள் வாசந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/32&oldid=1248099" இலிருந்து மீள்விக்கப்பட்டது