பக்கம்:மேனகா 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராகு, கேது, சனீசுவரன்

15

வீட்டுக்கு மூதேவி பெத்தம்மாள் வேறு தேவையில்லை” என்றாள்.

கோமளம்:- இந்தப் பெண்ணை வாலையும், தலையையும் கிள்ளிவிட்டு எப்படித்தான் வளர்த்தார்களோ! சுத்த மந்தியா யிருக்குமோ! பெண்ணாய்ப் பிறந்தவள் பாம்பைப்போலப் பரபரப்பாய்க் காரியங்களைச் செய்து கொண்டு எள்ளென்பதற்குள் எண்ணெயாய் நின்றாலல்லவா சந்தோஷமா யிருக்கும்! சோம்பேறிப் பிணம்; நன்றாக ஒன்றரைப்படி யரிசிப் பிண்டத்தை ஒரே வாயி லடித்துக்கொண்டு, ஒரு கவளி வெற்றிலையைப் போட்டுக்கொண்டு, மெத்தையை விட்டுக் கீழே இறங்காமற் சாய்ந்து ஹார்மோனியம் வாசித்துக் கொண்டு ஒயாமல் அவனோடு தனியாக விளையாடிக் கொண்டிருந்தால் அது போதாதோ? பெரிய மனிதர்களின் வீட்டுப் பெண்களுக்கு இவ்வளவு தான் தெரியும்; அந்த துப்பட்டிக் கலையக்கட்டரும் அதைத்தான் கற்றுக் கொடுத்திருப்பான்.

பெருந்தேவி:- அந்த மொட்டச்சி வளர்த்த முண்டை என்னடி செய்வாள்! தாயைத் தண்ணீர்த்துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டிற் பார்க்க வேண்டுவதில்லை. வீட்டிலிருக்கிற தாய் பாட்டி முதலியோரின் நடத்தை எப்படி இருக்கிறது? தங்கத்தின் யோக்கியதையை நான் பார்க்கவில்லையோ? சாந்தி முகூர்த்தத்தின் போது அவ்வளவு கூட்டத்திலே, அகமுடையான் வந்து காலடியில் நிற்கும் போது, காலை நீட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்த தடிச் சிறுக்கிதானே அவள். அந்த குட்டையில் ஊறிய மட்டை எப்படி இருக்கும்!-என்றாள்.

அப்போது வாசற் கதவை யாரோ இடித்து, “பெருந்தேவி பெருந்தேவி!” என்று அழைத்த ஓசை உண்டாயிற்று. சந்தோஷத்தால் முக மலர்ச்சி பெற்ற பெருந்தேவி, “அடி! சாமா வந்திருக்கிறான்; கதவைத் திற” என்றாள். உடனே கோமளம் எழுந்து குதித்துக்கொண்டோடி வாயிற் கதவைத் திறந்து விட, அடுத்த வீட்டுச் சாமா ஐயர்ஆடியசைந்து ஆடம்பரமாக உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/33&oldid=1248100" இலிருந்து மீள்விக்கப்பட்டது