பக்கம்:மேனகா 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மேனகா

நுழைந்தார். முதுகிலும், கழுத்திலும், கைகளிலும், மார்பிலும் வாசனை சந்தனத்தை ஏராளமாய்ப் பூசிக் கொண்டு, வாயில் தாம்பூலம், புகையிலை முதலியவற்றின் அழகு வழியப் புன்முறுவல் செய்தவராய்க் கூடத்திற்கு வந்தார். வாயிற் கதவைத் தாளிடாமற் சாத்திவிட்டுக் கோமளமும் அவரைத் தொடர்ந்து உள்ளே வந்தாள். அவர் இருபத்தாறு அன்றி இருபத்தேழு வயதடைந்தவர். அவர் நிலவளமுள்ள இடத்தில் உண்டான உருளைக் கிழங்கைப்போல உருண்டு திரண்ட சிவந்த மேனியைக் கொண்டிருந்தார். அவருடைய சுருட்டைத் தலை மயிரின் ஷோக்கு முடிச்சு ஒரு தேங்காயளவிருந்தது. அவர் மிக்க வசீகரமான தோற்றத்தையும் எப்போதும் நகைப்பை யன்றி வேறொன்றையும் அறியாத வதனத்தையும் கொண்டிருந்தார். அவருடைய கழுத்தில் தங்கக்கொடியும், தங்க முகப்பு வைத்த ஒற்றை உருத்திராட்சமும், காதில் வெள்ளைக் கடுக்கனும் இருந்தன. இடையில் துல்லியமான மல் துணியும், கழுத்திற் புதுச் சேரிப் பட்டு உருமாலையும் அணிந்திருந்தார். அவர் பெருந்தேவியம்மாளைப் பார்த்து புன்னகை புரிந்த வண்ணம் தோன்றி ஊஞ்சற் பலகையில் அமர்ந்தார்.

பின்னால் வந்த கோமளம், “அடி அக்காள்! இதோ சாமாவைப் பாரடி, ஊரிலே கலியாணம், மார்பிலே சந்தனம்” என்று கூறிய வண்ணம் சற்று தூரத்தில் தரையில் உட்கார்ந்தாள்.

தாம்பூலம் நிறைந்த வாயை நன்றாகத் திறந்து பேச மாட்டாமல் சாமாவையர் வாயை மூடியவாறே, “அழி! பெருந்தேவி! நல்ல வழன் வந்திழுக்கிழது; ஒழே பெண்; ழெண்டு லெட்சம் ழுபாய்க்கிச் சொத்திழுக்கிழது, நல்ல சுயமாசாழிகள், கலியாணம் செய்கிழாயா?” என்று வார்த்தைகளை வழவழ கொழகொழவென்று வெண்டைக் காய்ப் பச்சடியாக்கிப் பெருந்தேவிக்குப் பரிமாறினார். வாயைத் திறக்க மாட்டாமையால், “அடி” யென்பது “அழி” யாயிற்று. மற்றச்சொற்களிலுள்ள “ர”கரங்களெல்லாம் “ழ”கரங்களாயின. அது சரியான தமிழில், “அடி பெருந்தேவி! நல்ல வரன் வந்திருக்கிறது; ஒரே பெண்; இரண்டு லெட்சம் ரூபாய்க்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/34&oldid=1248101" இலிருந்து மீள்விக்கப்பட்டது