பக்கம்:மேனகா 1.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

315

இவளே கண்விழித்துப் பேசினால் பதில்சொல்; அப்போதும் இவளது மனதை அலட்டாமல் பார்த்துக்கொள், பெருத்த பயத்தினால் உண்டான மன அதிர்ச்சி இவளது நரம்புகளை வரம்பு கடந்து தளர்த்திவிட்டது. நரம்புகள் மிகவும் தாமதமாகவே தமது சுய நிலைமையை யடைய வேண்டும்; நாம் இன்னம் சிறிது தாமதமாய் மருந்து கொடுத்திருப்போ மானால் இவள் இதுவரையில் பிழைத்திருப்பதே அரிதாய்ப்போயிருக்கும்; அதே மருந்தை மூன்று மணி நேரத்திற்கொருமுறை மார்பில் தடவிக்கொண்டே இரு; மூக்கினால் உள்புறம் செலுத்தும் மருந்தை இனி மூக்கினால் வார்க்க வேண்டாம். இவள் விழிக்கும்போது அதை வாயினாலேயே இரண்டொருமுறை செலுத்தினால் முற்றிலும் குணமுண்டாய்விடும்; நான் போய்விட்டு வருகிறேன்” என்று இங்கிலீஷ் பாஷையில் கூறினாள்.

நூர்ஜஹான் கவலையோடு; “இனி உயிருக்குப் பயமில்லையே?” என்றாள்.

துரைஸானி:- இல்லை, இல்லை. இனி அதைப்பற்றி கவலைப்படாதே; சந்தேகப்படக்கூடிய குறிகள் ஏதாவது இனி தோன்றினால் உடனே எனக்குச் செய்தியனுப்பு. பகல் பதினொன்றரை மணிநேரம் வரையில் நான் இராயப்பேட்டை வைத்தியசாலையில் இருப்பேன். அதன் பிறகு என்னுடைய பங்களாவிலேயே இருப்பேன். இவளுடைய புடவையையும், நகைகளையும், இப்போது அணிவிக்கவேண்டாம்; அவைகள் மாத்திரம் விலக்கப்படாமலிருக்குமாயின் தடைபட்ட இரத்த ஒட்டம் இவ்வளவு விரைவில் திரும்பியிராது. இந்த மஸ்லினே உடம்பில் இருக்கட்டும்; இதை நாளைக்கு மாற்றலாம்.

நூர்:- சரி; அப்படியே செய்வோம்; நடுராத்திரி முதல் நீங்கள் இங்கிருந்து பட்ட பாட்டிற்கு நான் எவ்விதம் நன்றி செலுத்தப்போகிறேன்! தவிர, இந்த விஷயம் இப்போது எவருக்கும் தெரிதல் கூடாது. இரகசியமாக இருக்க வேண்டும்; என்னுடைய கணவனது மானமோ அவமானமோ உங்களுடைய கையிலிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/333&oldid=1251456" இலிருந்து மீள்விக்கப்பட்டது