பக்கம்:மேனகா 1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

மேனகா


துரைஸானி :- நூர்ஜஹான்! அதைப்பற்றிக் கவலை கொள்ளாதே. எப்படிப்பட்ட இரகசியமானாலும், நான் அதை வெளியிட மாட்டேன். வைத்தியர்கள் அதை வெளியிடுதல் கூடாது. எவ்வளவோ அந்தரங்கமான வியாதிகளுக்கெல்லாம் நாங்கள் சிகிச்சை செய்கிறோம். அவற்றை வெளியிடுவதனால் எங்களுடைய தொழிலே கெட்டுப்போகுமே; இரகசியத்தைக் காப்பாற்றுதலே இந்தத் தொழிலின் நாணயம்; இதைப்பற்றி நீ யோசனை செய்யாதே. நான் போய்விட்டு வருகிறேன் - என்றாள்.

நூர்:- சரி, நீங்கள்மாலையில் வருவதற்குள் இவள் நன்றாக விழித்துக்கொண்டால், இவளுக்கு எவ்விதமான ஆகாரம் கொடுக்கிறது? இவள் பிராமணப்பெண் என்பதை பார்வையிலே நீங்கள் அறிந்து கொண்டிருக்கலாம். அதற்குத் தகுந்த விதம் ஆகாரம் கொடுக்க வேண்டும். நாங்கள் தயாரித்த ஆகாரத்தைக் கொடுப்பதாய்ச் சொல்லி, ஒரு பிராமண பரிசாரகனை அழைத்து வரும்படி ஆளனுப்பியிருக்கிறேன். இந்தப் பங்களாவில் நாங்கள் வசிக்கும் இடத்திற்கும் இதற்கும் இடையில் நெடுந்துாரம் இருக்கிறதென்பது உங்களுக்குத் தெரியும். விஷயத்தை யெல்லாம் நான் என்னுடைய தகப்பனாரிடம் சொல்ல வேண்டாமென்று நினைத்தேன். என்னுடைய அக்காள் அப்படிச் செய்வது தவறென்று நினைத்து அவரிடம் சொல்லிவிட்டாள். அவரே பரிசாரகனை அழைத்து வரும்படி ஆளை அனுப்பினார். ஒரு மனிதர் அவசியம் வருவார். ஒருவரும் அகப்படாவிட்டால், நாம் என்ன ஆகாரத்தைக் கொடுக்கிறது? - என்று கேட்டாள்.

துரைஸானி:- இப்போது எவ்விதமான ஆகாரமும் கொடுக்க வேண்டாம். உட்புறம் செலுத்தப்படும் இந்த மருந்திலேயே தேக புஷ்டிக்குரிய மருந்தும் கலக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இன்று மாலை வரையில் பசியே தோன்றாது; ஒருக்கால் இவளே பசியென்று சொன்னால் சர்க்கரை கலந்து பாலில் சிறிதளவு கொடுப்பது போதும். இன்றிரவு பார்லி (Barley) அரிசிக் கஞ்சி கொடுக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/334&oldid=1251458" இலிருந்து மீள்விக்கப்பட்டது