பக்கம்:மேனகா 1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

மேனகா

இருந்தும், கொஞ்சமும் நல்லொழுக்கமும் மன உறுதியு மற்றவனாயும், நிறையில் நில்லாத சபலபுத்தியுள்ளவனாயும் இருப்பதைக் குறித்து வருந்தினாள். அவனுக்கும் தனக்குமுள்ள உறவு இனி ஒழிந்த தென்றும், அவனது முகத்திலே இனி விழிப்பதில்லை யென்றும் அவன் இனி தனது வீட்டிற்கு வராமல் தடுத்துவிட வேண்டும் என்றும், தனது இல்லற வாழ்க்கை அந்த இரவோடு ஒழிந்துபோய்விட்டதென்றும் உறுதியாக நினைத்து மனமாழ்கினாள். தனது சொந்த விசனத்தைக் காட்டிலும் மேனாவின் நிலைமையும், அவள் களங்கமற்றவளென்பதை ருஜுப்படுத்தி அவளுடைய கணவனிடம் அவளை எப்படி சேர்ப்பது என்னும் கடினமான காரியமும், அவள் மனதில் அதிகமாக வேரூன்றி வதைத்தன. அதிலேயே அவள் தனது முழு மனதையும் செலுத்தி, தனிமையில் சிந்தனை செய்து கலக்க மடைந்து மனமுருகிக் கண்ணீர் பெருக்கி உட்கார்ந்திருந்தனள்.

மிகவும் சிங்காரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறையில் சிறிய மாசும், தூசியும் தோன்றாத புதிய மெல்லிய பட்டுப் போர்வைகள், துப்பட்டிகள், திண்டு, தலையணைகள், முதலியவற்றி னிடையில் மேனகா அழகே வடிவாய்க் கிடந்ததும், அவளுக்கருகில் இரதிதேவியோவென்ன தனக்குத் தானே நிகராய் தேஜோ மயமாக நூர்ஜஹான் உட்கார்ந் திருந்ததும் தெய்வங்களும் காணக் கிடைக்காத கண்கொள்ளா அற்புதக் காட்சியாக விருந்தன. அவ் விருவரில் எவள் அழகிற் சிறந்தவள் என்பதைக் கண்டு பிடிப்பது எவருக்கும் பலியாக் காரியமாயிருந்தது. மேனகாவைப் பார்க்கையில், அவளது அழகே சிறந்ததாயும், இருவரையும் ஒன்றாகப் பார்க்கையில் இருவரும் இரண்டு அற்புத ஜோதிகளாகவும், ஒருத்திக்கு இன்னொருத்தியே இணையாகவும் தோன்றினர். ஒருத்தியை ஜாதி மல்லிகை மலருக்கு உவமை கூறினால் மற்றவளை ரோஜா மலருக்கு உவமை கூறுதல் பொருந்தும். ஒருத்தி வெண்தாமரை மலரைப்போன்றவளென்றால், மற்றவள் செந்தாமரை மலரை யொத்தவளென்றே கொள்ளவேண்டும். ஒருத்தியை இலட்சுமிதேவி என்றால், இன்னொருத்தியைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/336&oldid=1251460" இலிருந்து மீள்விக்கப்பட்டது