பக்கம்:மேனகா 1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

319

சரசுவதி தேவியென்றே மதிக்க வேண்டும். இருவரது அமைப்பும் அழகும் ஒப்புயர்வற்ற தனிப்பேறா விளங்கினவன்றி அவர்களைக் காணும் ஆடவர் மனதில் காமவிகாரத்தை யுண்டாக்காமல், அவர்களிடம் ஒரு வகையான அச்சமும், அன்பும், பக்தியும் உண்டாக்கத்தக்க தெய்வாம்சம் பொருந்திய மேம்பட்ட அமைப்பாகவும் அழகாகவும் இருந்தன. சிருஷ்டியின் செல்வக் குழந்தைகளாயும், கடவுளின் ஆசைக் குழந்தைகளாயும் காணப்பட்ட அவ்விரு மடமயிலார் வசிப்பதான பாக்கியம் பெற்ற இல்லத்தில், மனிதர் காலையிலெழுந்தவுடன் அவர்களது தரிசனம் பெறுவாராயின் அவர்களது மனக்கவலைகளும் துன்பங்களும் அகன்றுபோம். அந்த உத்தமிகளைப் பார்த்தாலே பசி தீரும்.

அவ்வாறு நூர்ஜஹான் துயரமே வடிவாக இரண்டொரு நாழிகை உட்கார்ந்திருந்தாள். அதற்குள் மேனகாவின் மார்பில் இரண்டுமுறை மருந்தைத் தடவினாள். அப்போது நூர்ஜஹானின் அக்காள் திடீரென்று உள்ளே நுழைந்து, “அம்மா பரிசாரகன் வந்துவிட்டார். ஏதாவது ஆகாரம் தயாராக வேண்டுமா? இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள்.

நூர்:- சற்று முன் கண்ணைத் திறந்து நன்றாகப் பார்த்தாள். இனி பயமில்லை யென்று துரைஸானியம்மாள் சொல்லி விட்டாள். இப்போதும் ஆகாரம் கேட்க மாட்டாளாம். எல்லாவற்றிற்கும் பாலை மாத்திரம் காய்ச்சி வைக்கட்டும் - என்றாள்.

அலிமா:- சரி; அப்படியே செய்வோம்; உனக்குக் காப்பியும் சிற்றுண்டியும் இவ்விடத்திற்கே கொண்டு வருகிறேன். நீ அவற்றைச் சாப்பிடு; வேண்டா மென்று சொல்லாதே. - என்றாள்.

நூர்:- இல்லை அக்கா எனக்கு இப்போது ஒன்றும் வேண்டாம். பெருத்த விசனத்தினால் எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை. பசி உண்டானால் பார்த்துக்கொள்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/337&oldid=1251461" இலிருந்து மீள்விக்கப்பட்டது