பக்கம்:மேனகா 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மேனகா


சாமா:- பங்கஜவல்லியாம்.

பெருந்தேவி :- (சந்தோசத்தோடு) நல்ல அழகான பெயர். மேனகாவாம் மேனகா! பீனிகாதான். தொடைப்பக்கட்டை! பீடை நம்மைவிட்டு ஒழிந்து போனது நல்லதுதான். இதையே முடித்து விடுவோம்; இந்த ஊருக்கு இப்போது அவர்களில் யாராயினும் வந்திருக்கிறார்களா?

சாமா:- பெண்ணுக்கு அம்மான் வந்திருக்கிறார். அவரை இங்கே இன்று ராத்திரி அழைத்து வருகிறேன். அதற்குள் உன் தம்பி வராகசாமியும் கச்சேரியிலிருந்து வரட்டும்; அவனுடைய அபிப்பிராயத்தைக் கேட்போம்.

பெருந்தேவி:- அவன் என்ன சொல்லப் போகிறான்? நாம் பார்த்து எவளைக் கலியாணம் செய்து வைத்தாலும் அது அவனுக்குத் திருப்திதான். இப்போது முதலில் பதினாயிரம் ரூபா வருகிறது. ஒரே பெண்; பின்பு ஆஸ்தி முழுவதும் வந்து சேர்ந்து விடும். இந்த சம்பந்தம் கசக்குமோ! அவன் என்ன ஆட்சேபனை சொல்லப் போகிறான். நீ எதைப் பற்றியும் யோசனை செய்ய வேண்டாம்; இதையே முடித்துவிடப்பா. இந்த ஆனி மாசத்துக்குள் முகூர்த்தம் வைத்து விடு.

சாமா:- ஆகா! எவ்வளவு சுருக்கு! கலியாண மென்றால் உங்கள் வீட்டுக் கிள்ளுக்கீரைபோலிருக்கிறது. இதில் பல இடைஞ்சல்கள் இருக்கின்றன. பெண்ணுக்கு அம்மான் என்னைக் கேட்ட முதற் கேள்வி என்ன தெரியுமா? 'உங்களுக்குச் சொந்தத்தில் வீடிருக்கிறதா' வென்று கேட்டார்.

பெருந்தேவி:- (ஆவலோடு) இருக்கிறதென்று சொல்லுகிறதுதானே.

சாமா:- ஆம்; அப்படித்தான் சொன்னேன். சொல்லுவது மாத்திரம் போதுமா? வீடு வேண்டாமா? நாம் அவர்களுக்கு எல்லா விஷயத்திலும் சரிசமானமாக இல்லாமற் போனாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/36&oldid=1248103" இலிருந்து மீள்விக்கப்பட்டது