பக்கம்:மேனகா 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராகு, கேது, சனீசுவரன்

19

ஒரு வீடாவது நமக்கு அவசியம் இருக்கத்தான் வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம்; வராகசாமிக்கு முன்னொரு கலியானம் ஆயிருக்கிற தென்பதும், அந்தப் பெண் உயிரோடு இருக்கிறாள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்தால், அவர்கள் பெண்ணைக் கொடுக்கமாட்டார்களே; அதற்கு என்ன யோசனை சொல்லுகிறாய்?

கோமளம்:- அது இவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது? கேள்வியுண்டானால் இல்லையென்று சொல்லி விட்டாற் போகிறது.

சாமா:- (கலகலவென்று சிரித்து) கோமளத்தின் புத்தி உலக்கைக் கொழுந்துதான். முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? அதெல்லாம் பலியாது; கலியாணம் முடிவானபின் இரகசியம் வெளியானாற் கவலையில்லை; அதற்குமுன் வெளியானாற் குடி கெட்டுப் போகும். கலியாணம் நின்று போய்விடும்.

பெருந்தேவி:- ஊருக்கெல்லாம் வாந்திபேதி வருகிறது; இந்தப் பீடைக்கு வரமாட்டே னென்கிறதே. இங்கே இருந்து போய் ஒரு வருஷமாய்விட்டது. நானாயிருந்தால் இந்தமாதிரி அவமானப்பட நேர்ந்தால், உடனே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு உயிரை விட்டிருப்பேன். புருஷன் தள்ளி விட்டானென்று ஊர் முழுவதும் ஏளனஞ் செய்வதைக் கேட்டு எந்த மானங்கெட்ட நாய்தான் உயிரை வைத்திருக்கும்.

சாமா:- அவளைத் தொலைப்பதற்கு வழி முதலிலேயே சொன்னேன். நீங்கள் கவனிக்கவில்லை. தப்பித்துக் கொண்டு போய்விட்டாள். இப்போது என்ன செய்கிறது?

பெருந்தேவி:- ஆமடா சாமா! அது நல்ல யோசனைதான். அதைச் செய்திருந்தால் இப்போது காரியம் நன்றா யிருக்கும்.

கோமளம்:- என்ன யோசனை? எனக்குச் சொல்லவில்லையே; விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடுகிறதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/37&oldid=1248104" இலிருந்து மீள்விக்கப்பட்டது