பக்கம்:மேனகா 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராகு, கேது, சனீசுவரன்

21


கோமளம் :- அவள் துலுக்கனுக்கு நன்றாய்ப் பொங்கிப் போடுவாளே! ஒருநாளும் அவள் அதற்கு இணங்கமாட்டாள்.

சாமா:- நிஜந்தான். அவள் எங்கேயாவது கிணற்றிலோ கடலிலோ விழுந்து உயிரையாவது விட்டு விடுவாளேயன்றி அவனுக்கு ஒருநாளும் சமைத்துப் போடமாட்டாள். அந்தக் கல்லை நமக்கெதற்கு? மரக்காயனிடம் நாம் பணத்தைக் கறந்து கொண்டு வந்து விடுவோம். அவள் அவனிடத்தில் உயிரை விட்டுவிடட்டுமே! நாம் அவளைக் கொன்றோமென்பது இல்லாமல் போகுமல்லவா?

பெருந்தேவி:- ஆமடா சாமா! நீ சொல்வது நல்ல யோசனைதான். அவளை நாம் கொல்லுவதேன்? பாவம்! துலுக்கனிடத்தில் அகப்பட்டுக் கொண்டால் அவள் தானே உயிரை மாய்த்துக்கொள்ளுகிறாள்; அப்படியே முடித்து விடப்பா!

கோமளம்:- அவன் ஒரு வருஷத்திற்கு முன் சொல்லியிருக்கிறான் போலிருக்கிறது. இப்போது வேறு யாரையாவது ஏற்பாடு செய்து விட்டானோ என்னவோ?

சாமா:- இல்லை இல்லை, நேற்றுகூட அவன் சொன்னான்.

பெருந்தேவி:- டிப்டி கலெக்டர்கூடப் பெண்ணை அழைத்துக் கொள்ளும் படி, தஞ்சாவூருக்கு போன ரெங்காசாரியார் மூலமாயும், சடகோபாசாரியார் மூலமாயும் சொல்லி யனுப்பினானே. நாம் இராஜி யாவதைப்போல பாசாங்கு செய்து பெண்ணை அழைத்து வந்து ஏழெட்டு நாட்கள் வைத்திருந்து பணத்தை வாங்கிக் கொண்டு தந்திரமாக அவளைத் தொலைத்துவிட்டு ஒன்றையும் அறியாதவரைப் போலிருந்து விடுவோமே. இது இரண்டாங் கலியாணத்துக்கு நிரம்பவும் அநுகூலமாயும் போகுமல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/39&oldid=1248106" இலிருந்து மீள்விக்கப்பட்டது