பக்கம்:மேனகா 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழைய குருடி! கதவைத் திற(வ)டி!

25

தாக்கீது அனுப்பிவிட்டார்; அவள் ஜெபம் செய்யத்துளசிமணி மாலை ஒன்று வாங்கினார்; அவள் மடியாகப் படுத்துக்கொள்ள வேண்டு மென்னும் கருத்துத்தோடு, இரண்டு மான் தோல்கள் வேண்டு மென்று மருங்காபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலை முழுங்கி மகாதேவ ஐயருக்குச் செய்தி அனுப்பி விட்டார்; அவளுடைய பலகாரத்திற்குத் தேவையான புழுங்கலரிசி, பச்சைப் பயறு, வெல்லம் முதலியவைகளில் அவ்வாறு மூட்டைகள் அனுப்பும் படி தலைகாஞ்சபட்டி ரிவின்யூ இன்ஸ்பெக்டர் தாண்டவராய பிள்ளையிடம் ஆளை அனுப்பினார்; இவைகளால் எவ்விதக் குறைவு மின்றி நல்ல நிலையில் தமது புத்திரியைத் தாம் வைத்துத் தம்முடைய கடைமையை முற்றிலும் நிறைவேற்றிவிட்டதாகவும், தமது புத்திரி சந்துஷ்டியான பதவியிலிருக்கிறாள் என்றும் நினைத்துக்கொண்டார்; அப்போதே தம்முடைய சிரமீதிருந்த பளுவான மூட்டையைக் கீழே போட்டவரைப் போல இன்புற்றார்; இனி தமது உத்தியோகத்தை வீட்டின் கவலையின்றிப் பார்க்கலா மென்று நினைத்துத் தமது புத்திசாலித் தனத்தைப் பற்றித் தாமே பெருமை பாராட்டிக் கொண்டார்; இனி, தமது மனையாட்டியும் தாமும் எத்தகைய இடையூறு மின்றிக் கொஞ்சிக் குலாவி யிருக்கலா மென்றெண்ணி அளவளாவினார்; இனிப் பெண்ணின் நிமித்தம் சீமந்தம், பிள்ளைப்பேறு, மருமகப்பிள்ளையை வணங்குதல் முதலிய அநாவசியமான உபத்திரவங்களுக்கு ஆளாகாமல் தாம் தப்பித்து விட்டதாய் நினைத்து மகிழ்ந்தார். பொல்லாக் குணமுடைய மருமகப்பிள்ளையைப் பெற்று, விடுபடும் வழியறியாமல் கண் கலங்க வருந்தும் பெற்றோருக்கு நமது டிப்டி கலெக்டர் எத்தகைய குறுக்கு வழியைக் காண்பித்தார்! மருமகப்பிள்ளை ஏதாவது துன்பம் கொடுத்தால் உடனே அவரைக் கொன்று விடுதலே காரிய மென்று காட்டுகிறார். எப்படி கொல்லுகிறது? தமது புத்திரியை விதவையாக்கி வீட்டில் வைத்துக்கொள்ளுதலே அவளுடைய கணவனைக் கொன்றுதலைப் போலாகுமல்லவா? ஆனால் இந்தத் தந்திரம் இவருடைய மூளையைத் தவிர, வேறு எவருடைய மூளைக்கும் தோன்றியதே பெருத்த விந்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/43&oldid=1248110" இலிருந்து மீள்விக்கப்பட்டது