பக்கம்:மேனகா 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

மேனகா


இவ்வாறு சில மாதங்கள் கழிந்தன. டிப்டி கலெக்டருடைய காரியங்க ளெல்லாம் பெண்ணின் கவலையின்றி நடைபெற்று வந்தன. எஜமானரும், எஜமானியம்மாளும் சுற்றுப்பிரயாணம் போவதும், அவருடைய பைசைக்கிளுக்கு ஆசார உபசாரங்கள் நடப்பதும், கோர்ட் குமாஸ்தா கோபாலையர் எஜமானனிடம் நடுநடுங்கிப் பல்லிளித்து நிற்பதும், ஆர்டர்லி அண்ணாமலை பிராது மனுக் கூப்பிடுவதும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்பல நாடார் பொய்க் கேஸ் கொண்டு வருவதும், கண்டாகோட்டை கணக்கன் மகளைச் சுண்டாகோட்டை ஜெமீன்தார் கற்பழித்துக் கச்சேரிக்கு வருவதும், பஞ்சாங்கம் குப்புசாமி ஐயருடைய பசுமாட்டை நஞ்சாப்பட்டிக் காளிங்கராயன் பிடிப்பதும், வல்லம் கிராம முன்சீப்பு செல்லப்பையர் டிப்டி கலெக்டருக்கு வாழைத்தாறுகளை அனுப்புவதும், கெங்கா ரெட்டி என்னும் சேவகன் பங்காவை இழுத்துக் கொண்டே தூங்கி விழுவதும், பட்டாமணியம், சட்டைநாதபிள்ளை சர்க்கார் பணத்தை வட்டிக்குக் கொடுப்பதும், தாலுகா குமாஸ்தா தங்கவேலுப் பிள்ளை தொட்டி தலையாரிகளை ஆட்டி வைப்பதும், அவர் மனைவி உண்ணாமுலையம்மாள், “எண்ணிக்கொள்” என்று ஒன்பது மாதத்திற்கொரு பிள்ளையை ஒழுங்காய்ப் பெறுவதும், தாசில்தார் தாந்தோனிராயர் பருப்பு சாம்பாரில் நீந்தி தினம் தெப்ப உற்சவம் செய்வதும், கோடி வீட்டுக் குப்பம்மாள் தெருளுவதும், ஊளைமூக்குச் சுப்பனுக்கு உபநயனம் நடத்துவதும், சப்பைக்கால் கந்தனுக்கு சாந்தி கலியாணம் நடத்துவதும், உளருவாய் ஜானகிக்கு ஊர்வலம் நடத்துவதும், எதிர்வீட்டு நாகம்மாள் எமலோகம் போகிறதும், பிரிந்தோர் கூடுவதும், கூடினோர் பிரிவதும் ஒழுங்காய் நடைபெற்று வந்தன.

ஆனால் கணவன் உயிருடன் இருக்கையிலேயே, விதவையாக்கப்பட்ட பூங்கொடியான மேனகா தன்னுடைய நாயகனை விடுத்து வந்த பிறகு பைத்தியங் கொண்டவளைப் போலக் காணப்பட்டாள். உண்பதை விடுத்தாள்; துயில்வதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/44&oldid=1248111" இலிருந்து மீள்விக்கப்பட்டது