பக்கம்:மேனகா 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழைய குருடி! கதவைத் திற(வ)டி!

27

ஒழித்தாள்; நல்லுடைகளை வெறுத்தாள்; நகைகளை அகற்றினாள்; அழகே வடிவாகக் காணப்பட்ட தனது அளகபாரத்திற்கு எண்ணெயு மிடாமல் சடையாய்ச் செய்து விட்டாள்; நகையற்ற முகத்தையும், மகிழ்வற்ற மனதையும் கொண்டவளாய்த் தன் சிந்தையை ஓயாமல் வேறிடத்தில் வைத்தவளாய் வாடி வதங்கித்துரும்பாய் மெலிந்தாள்.

“துயிலெனக்கண்க ளிமைத்தலு முகிழ்த்தலுந் துறந்தாள்
வெயிலிடைத்தந்த விளக்கென வொளியிலா மெய்யாள்
மயிலிற்குயின் மழலையாண் மானிளம் பேடை
அயிலெயிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்.”

என்றபடி துவண்டு இரண்டொரு மாதத்தில் எழுந்திருக்கும் திறனற்றவளாய் அயர்ந்து தள்ளாடினாள். அவளுடைய எண்சாண் உடம்பும் ஒரு சானாய்க் குன்றியது. ஹார்மோனியம் முதலிய வாத்தியங்களின் இன்னொலி அண்டை வீடுகளிலிருந்து தோன்றி அவளுடைய செவியில் மோதினால், ஆயிரம் தேள்கள் அவளது தேகத்தில் ஒரே காலத்தில் கொட்டுதலைப்போல வதைப்பட்டாள். மஞ்சள், மலர்கள் முதலிய மங்கலச் சின்னங்களை அறவே ஒழித்தாள். தனது உடம்பை ஒரு சிறிதும் கவனிக்காமலும், பிறர் மொழிவதற்கு மறுமொழி கூறாமலும்,

“விழுதல் விம்முதல் மெய்யுற வெதும்புதல் வெருவல்
எழுத லேங்குத லிங்குத லினியனை யெண்ணித்
தொழுதல் சோருத லுறங்குத றுயருழந் துயிர்த்தல்
அழுத லன்றிமற் றயலொன்று செய்குவ தறியாள்.”

என்ற வண்ணம் ஓயாமல் அழுதலையே அலுவலாய்ச் செய்து கொண்டிருந்தாள். தன்னுடைய சொந்த இடமாகிய தண்ணீரை விடுத்து வெளியேற்றப்பட்ட மீன் குஞ்சு தரையில் கிடந்து அசைவற்று செயலற்று உயிரை அணுவணுவாய்ப் போக்கி அழிவதைப் போலத் தன் கணவனுடைய இடத்தை விடுத்துவந்த பிறகு அவளுக்கு உலகமே உயிரற்றுப் பாழ்த்து இருளடைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/45&oldid=1248112" இலிருந்து மீள்விக்கப்பட்டது