பக்கம்:மேனகா 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மேனகா

போனதாய்த் தோன்றியது. பெண்மக்களுக்குக் கணவனைப் பகைமை காரணமாக விடுத்துப் பிரிதலைக் காட்டிலும் கொடிய விபத்தும், துயரும் வேறு உண்டோ? கூரிய புத்தியையும் கவரிமானினும் அதிகரித்த மானத்தையும் கொண்ட அன்னப் பேடாகிய மேனகா வேடன் அம்பால் அடிபட்டுக் கிடக்கும் பறவைகளைப்போலப் புண்பெற்ற மனத்தோடு சோர்ந்து கிடந்தாள்.

ஆரம்பத்தில் அந்த நிலைமையை நோக்கிய கனகம்மாள், மேனகா தன் கணவன் வீட்டில் தனக்கு நேர்ந்த துன்பங்களை யெண்ணி அவ்வாறு வருந்துகிறாள் என நினைத்தாள். ஆனால் சொற்ப காலத்தில் அவ்வெண்ணம் தவறென உறுதியாயிற்று. அவள் தனது நாதன் மீது கொண்ட ஆசையாலும்; அவனது பிரிவாற்றாமையாலும் அவ்வாறு அலமருகின்றாள் என்பதைக் கண்டாள். அத்தகைய நிலைமையில் அவளைத் தமது வீட்டிலேயே எவ்வாறு வைத்துக் கொள்வதென்பதைப் பற்றிப் பன்னாட்கள் யோசனை செய்தாள்; அவளைத் தன்னால் இயன்றவரை தேற்றி, அவளுக்குரிய தேவைகளைச் செய்து அவளைக் களிப்பிக்க முயன்றாள். அவள் அவற்றைச் சிறிதும் கவனித்தாளன்று. இரவுகளிற் பாட்டியின் அண்டையில் படுத்திருக்கும் மேனகா தனது துயிலில் கணவனைப் பற்றிப் பிதற்றியதையும், திடுக்கிட் டெழுந்து அவனை நினைத்து அழுததையுங் கண்ட கனகம்மாளுக்கு அப்போதே உண்மை நிச்சயமானது. கனகம்மாளினது மனதும் உடனே மாறியது. வராகசாமியின் மீது அவள் அது வரையில் கொண்டிருந்த வெறுப்பு விலக, அவன் மாத்திரம் நற்குணமுடையவனாய் அவளுடைய அகக்கண்ணிற்குத் தோன்றினான். எப்பாடு பட்டாயினும் அவளைக் கணவனிடம் கொண்டு போய் விடுதலே ஒழுங்கென அவள் நினைத்தாள்; சாம்பசிவ ஐயங்காரிடம் உண்மையைத் தெரிவித்தாள். அவருடைய உத்தியோக மகோத்சவத்தில் அந்த மொழி அவருடைய செவியில் ஏறவில்லை. அம்மாள் வேளைக்கு வேளை மத்தளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/46&oldid=1248113" இலிருந்து மீள்விக்கப்பட்டது