பக்கம்:மேனகா 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனதிற்குகந்த மன்மதன்

41

கபடமில்லாமலும் பேசுவாள்? அவள் முகத்தில் கோபமும் வாயிற் கொடுமையான சொல்லும் தோன்றியதை நான் அறியேன்.

சாமா:- பாட்டி கனகம்மாளுக்கு அப்புறந்தான் மற்றவர்கள். அவளுடைய பிரியத்துக்கு மற்றவர்களுடையது உறை போடக் காணாது; வராகசாமி! வராகசாமி! என்று இவனைக் கீழே விடமாட்டாளே! அப்பேர்ப்பட்ட அருமையான மனிதர்களிடம் நமக்கு மனஸ்தாபம் உண்டானது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னவோ நம்முடைய வேளைப் பிசகினால் இப்படி நடந்து விட்டதே யொழிய யார் பேரிலும் குற்றமில்லை - என்றார்.

அம்மூவரும் கூறிய சொற்களைக் கேட்ட வராகசாமியின் மனதில் தன் மனைவி முதலியோர் மீது உண்டாயிருந்த வெறுப்பு முற்றிலும் ஒரு நொடியில் அகன்றது. அவன் புரிந்த கொடுமைகளைக் குறித்து ஒரு வித கழிவிரக்கம் தோன்றி அவனை வருத்த ஆரம்பித்தன.

அவனுடைய முகக்குறியை உணர்ந்த பெருந்தேவி அதுவே சமயமென நினைத்து, “ஆகா! மேனகாவின் கடிதத்தைப் பார்த்தது முதல் என் மனம் படும்பாட்டை எப்படி வெளியிடுவேன் சொல்லின் அழகும், கருத்தின் உருக்கமும் என்னைப் பிடித்து உலுக்கி விட்டன. கடைசியில் அவள் உயிரை விட்டுவிடப் போகிறேன் என்றல்லவா எழுதியிருக்கிறாள்! அடே சாமா! அந்தக் கடிதத்தை எங்கே வைத்தீர்கள்? அதை இன்னொரு தரம் படிக்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது” என்றாள்.

சாமா:- அடி கோமாளீ! நீதானே அதை வராகசாமிக்குக் காட்டிவிட்டு பெட்டியில் வைத்துப் பூட்டினாய். அதை எடு - என்றான்.

அவள் உடனே கடிதத்தை எடுத்து வந்து அடியில் வருவாறு படித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/59&oldid=1248126" இலிருந்து மீள்விக்கப்பட்டது