பக்கம்:மேனகா 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும்பிடும் கள்ளன்

79

அறியாதவர். மேலதிகாரிகளையும் வசியப்படுத்த அவர் கற்க வில்லை. இரண்டொரு வருஷங்களில் அவர் தமது உத்தியோகத்தை விட்டுவிட நேர்ந்தது. அப்போது அவர் தம் நண்பர் ஒருவருக்கு அடியில் வருமாறு கடிதம் எழுதி அனுப்பினார். “ தாசில் உத்தியோகத்திற்குக் கல்வியும் தேவையுமில்லை. மூளையும் தேவையுமில்லை. மாதம் இரு நூறு ரூபாயை வீண் செலவு செய்து ஒரு மனிதனையும், அந்த வேலைக்கு வைக்கவேண்டுவதில்லை. பயங்கரமான ஒரு தோற்றத்தைக் கொண்ட ஒரு நாயைப் பிடித்து அதற்குச் சொக்காய், தலைபாகை முதலியவற்றை அணிவித்து நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும். பக்கத்தில் ஒரு டபேதார் நிற்க வேண்டும். எதிரில் வரும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாலுக்கா குமாஸ்தாக்கள், கிராம முனிசீப்புகள், கணக்குப் பிள்ளைகள் முதலியோரைக் கண்டு அந்த நாய் நன்றாய்க் குலைத்துக் கடிக்கப் போவதைப்போலப் பாய வேண்டும். அதே காலத்தில் கலெக்டர் முதலிய மேலதிகாரிகளைக் கண்டால், அன்னமிடுவோரின் பின்னர் வாலைக் குழைத்துச் செல்லும் நாய்களைப்போல, அந்த தாசில் நாய் உடனே செய்யவேண்டும். இவ்வாறு ஒரு நாய் இரண்டு தாலுக்காக்களின் தாசில் வேலையைத் திறமையோடு செய்யும்” என்று எழுதினார். அவர் பொறாமையால் அவ்வாறு கூறினாரோ அன்றி அது உண்மையோ வென்பதை அந்த இலாகாவில் இருப்பவர்களே நன்கறிவர். ஆனால், தாந்தோனிராயர் விஷயத்தில் இரண்டொரு விஷயங்கள் மாத்திரம் உண்மையா யிருந்தன. அவர் கீழிருந்தவர் விஷயத்தில் சாதாரண நாயைப் போல் நடக்கவில்லை; பைத்தியங் கொண்ட நாயைப்போலிருந்தார். மேற்கண்ட கடிதத்தில், “குலைத்துக் கடிக்கப் போவதைப் போல பாயவேண்டு” மென்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நமது தாந்தோனி ராயர் உண்மையிலேயே வீழ்ந்து கடித்துவிடுவார். அவருடைய ஆளுகையில் கீழிருந்த அதிகாரிகள் ரத்தக்கண்ணிர் விடுத்தனர். ஆனால், அவர் மேலதிகாரிகளான துரைகளை மயக்குவதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/97&oldid=1249174" இலிருந்து மீள்விக்கப்பட்டது