பக்கம்:மேனகா 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மேனகா

யெளவனப் புருஷரை மயக்கும் வேசையரைக் காட்டினும் பெருந் திறமை வாய்ந்தவர். அவர் ஆணாய்ப் பிறவாமல் பெண்ணாய்ப் பிறந்திருந்தால், ஐரோப்பாக் கண்டமே அவரது காலடியில் வீழ்ந்து கிடக்குமோ வென்று பலரது மனதில் ஐயம் தோன்றலாம். அதற்கு நாம் என்ன செய்வது? அது அவருடைய பாக்கியம். பெரிய கலெக்டர் துரையின் பூரணமான தயவை அவர் பெற்றிருந்தமையால், டிப்டி கலெக்டர் முதலிய சிறிய அதிகாரிகள் அவருக்கு அதிகாரிகளாய்த் தோன்றவில்லை. மலையை விழுங்கும் மகாதேவ சாமிக்குக் கதவு ஒரு அப்பளமா மென்பர் நமது பெண்டீர். தாந்தோனிராயர் நமது சாம்பசிவ ஐயங்காரிடத்தில் வெளிக்கு மாத்திரம் பணிவும் அன்பும் கொண்டவரைப் போல நடித்துப் பகட்டி வந்தார்; உண்மையிலோ சாம்பசிவ ஐயங்கார் முன் கோபத்தால் அப்போதைக்கப்போது திட்டியதும் கடிந்து கொண்டதும் ஈட்டியாற் குத்துதலைப் போல தாந்தோனி ராயருடைய மனதில் தைத்தமையால், அவரிடம் உள்ளுற வெறுப்பும், பகைமையுங் கொண்டிருந்தார். தாந்தோனி ராயர் பெரிய கலெக்டரிடம் சென்றால், அவர் தாசில்தாருக்கு ஆசனமளித்து அவரை உட்காரவைத்தல் வழக்கம். நமது சாம்பசிவமோ உட்காரச் சொல்லுவதுமில்லை.

சாம்பசிவத்திற்கும், தாந்தோனிக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. சாம்பசிவ ஐயங்கார் இளகிய மனத்தினராயினும் முன்கோபமும், கடிந்த சொல்லுமுடையவர்; அதனால் பகைவர் பலரைப் பெற்றவர். தாந்தோணிராயர் கொடிய மனத்தினர் ஆனாலும் இனிய சொல்லினர்; ஏமாற்றும் திறமை உடையவர்; ஆகையால் அவரிடம் பலர் நத்தியலைந்தனர். சாம்பசிவம் தமது அலுவலையும், தமது கடமைகளையுமே மிக்க மதிப்பவர் அன்றி மனிதரைப் பற்றிக் கவனிப்பதில்லை. அவருக்குத் தமது மனிதனுக்கு ஒன்று பிறமனிதனுக்கு ஒன்று என்னும் நியாயம் கிடையாது. மேலதிகாரிகளுக்கு அஞ்சியோ, அன்றி அவர்களின் விருப்பின்படியோ, நீதிதவறி நடப்பவரல்லர். தாந்தோனி ராயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/98&oldid=1249175" இலிருந்து மீள்விக்கப்பட்டது