பக்கம்:மேனகா 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மேனகா

கொண்டவரைப் போல தலைவிரிகோலமாக தஞ்சை ரயிலடியி லிறங்கி, ஒரு குதிரை வண்டியி லேறிக்கொண்டு காற்றாகப் பறந்து ஓடிவந்து தமது வீட்டை யடைந்தனர்; அவர்கள் தங்களது உடம்பையும், மற்ற எல்லாவிதமான கவலைகளையும், உலகத்தையும் மறந்தவர்களாய், தங்கம்மாள் உயிருடனிருக்கிறாளோ, அன்றி இறந்து போய்விட்டாளோ என்ற ஒரே கவலையைக் கொண்டு அவளைப் பார்க்கவேண்டு மென்னும் ஆவலொன்றினாலேயே தள்ளப்பட்டு வந்து சேர்ந்து வீட்டின் வாசலில் வண்டியைவிட்டிறங்கினர். திண்ணையில் சேவகர் ஒருவரேனும் காணப்படவில்லை. வெளிக்கதவு தாளிடப் படாமல் வெறுமையாக மூடப்பட்டிருந்தது. அதைத் திறந்து கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்து தாழ்வாரம், கூடம், அறைகள், மேன்மாடி முதலிய எல்லா இடங்களிலும் புகுந்து புகுந்து தேடினர். மனிதருக்குப் பதிலாக கம்பங்களும், சாமான்களுக்குப் பதிலாக வெறுவெளியும் காணப்பட்டன வன்றி அசையும் பொருட்கள் ஒன்றும் காணப்படவில்லை. அது ஒழித்து விடப்பட்ட காலி வீட்டைப்போலிருந்தது. எங்கும் இரத்தக் குறிகள் காணப்பட்டன; அவைகளைக் காண இருவருக்கும் மூளை குழம்பியது. பெருங் கலக்க மடைந்து செய்யவேண்டுவதை அறிய மாட்டாமல் திகைத்து வாசலி லிருந்த வண்டியடியில் வந்து நின்றனர். அவர்களைக் கண்டு இரக்கங்கொண்ட எதிர்த்த கடையின் சொந்தக்காரன் எழுந்து ஓடிவந்து அவர்களிடம் விவரங்களைச் சொல்லி, தங்கம்மாள் வைத்தியசாலையில் இருப்பதாகக் கூற, அவர்கள் உடனே வண்டியில் ஏறிக்கொண்டு வைத்தியசாலையை யடைந்து, வண்டியை விட்டிறங்கி உட்புறம் நுழைந்தனர். அங்கிருந்த ஒரறையின் வாசலில் கிட்டனும், ரெங்கராஜும் மிகுந்த விசனத்தோடு இருக்கக் கண்டனர். அப்போது அவர்கள் தாம் எந்த உலகத்தில் இருக்கின்றோம் என்பதை மறந்தனர்; இருதிறத்தார்களும் ஒருவரை ஒருவர் கண்ட காட்சி, பிரிந்து போன கன்றும் தாயும் கூடியதைப் போல இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/105&oldid=1251982" இலிருந்து மீள்விக்கப்பட்டது