பக்கம்:மேனகா 2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

105

இருதிறத்தாரின் தேகங்களும் பதறின; இருதிறத்தாரும் கண்ணீர்விட்டு விம்மி விம்மிப் பொருமினர்.

சாம்பசிவம் தஞ்சைக்கு வந்த தொடக்கத்தில் ரெங்கராஜுவை வைததும், அடித்ததும், தெரிந்த விஷயம். அதன் பிறகும் அவர் முன் கோபத்தைக் காட்டிப் பேசுவதே வழக்கம். என்றாலும், ரெங்கராஜு மிகவும் நற்குணமும் விவேகமும் உள்ள மனிதன். அவன் டிப்டி கலெக்டரது குடும்பத்தில் பழகப் பழக அவர்களது பெருந்தன்மை, உள்ளார்ந்த குணம், அன்பு, நீதிநெறி தவறாத சீலம் முதலியவற்றைக் காணக் காண அவன் சாம்பசிவத்தினிடமும் மற்றையோரிடமும் ஆழ்ந்த அபிமானமும், வாஞ்சையும் வைத்து அவர்கள் பொருட்டு தனது உயிரையும் கொடுக்கக் கூடிய நிலைமையில் இருந்தான். திடீரென்று கொள்ளை நடந்ததையும், டிப்டி கலெக்டர் வேலையிலிருந்து நீக்கப் பட்டதையும் கேட்ட ஏனைய சேவகர்களும் ஜனங்களும் டிப்டி கலெக்டரைப்பற்றி பலவாறு தூற்றிப் பேசிப் புரளி செய்தனர். அவரது வீட்டில் காவல் காத்திருந்த சேவகர்கள் யாவரும் அதை விட்டுக் கச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தனர். ரெங்கராஜு ஒருவனே, கிட்டன் தங்கம்மாள் முதலியோரது காயங்களைக் கட்டி, அவர்களுக்குரிய அவசர சிகிச்சைகளைச் செய்தான்; உடனே தனது வீட்டிற்கு ஒடி தனது மனைவியின் தாலிக்கு இரு புறங்களிலுமிருந்த மணிகளைக் கழற்றி அடகு வைத்துப் பணம் வாங்கி வந்து தந்தியடித்ததன்றி, அவர்களுக்குத் தேவையான உடைகளையும் கொணர்ந்து கொடுத்தான்; தங்கம்மாளை வைத்தியசாலைக்கு எடுத்து வந்து சிகிச்சை செய்வித்து, தண்ணீர் கூட அருந்த மனமற்றவனாய் பதைபதைத்து கிட்டனுடன் கூட வாசலிலேயே இருந்தான்; சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய இருவரையும் கண்டவுடன் பதறி எழுந்து கண்ணிர் விடுத்தான், கனகம்மாளைப் பார்த்து, “பாவிப்பயங்க எஜமானியம்மாளே அடிச்சுப்புட்டாங்க, பெரியம்மா!” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/106&oldid=1251985" இலிருந்து மீள்விக்கப்பட்டது