பக்கம்:மேனகா 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

மேனகா

கொண்டுபோய் விடுவாயோ! என் பிள்ளை கூட என்னிடத்தில் அவ்வளவு பிரியமும் மரியாதையும் வைக்கவில்லையே! எத்தனை ஜென்மமெடுத்தாலும், என்ன தவம் செய்தாலும் உன்னைப் போன்ற நாட்டுப் பெண் எனக்கு வருவாளா! பாவியாகிய எனக்கு நல்லது நிலைக்காதோ! கிழவியான என்னை அந்த எமன் கொண்டு போகக் கூடாதா! பட்டணத்தில் குழந்தையைப் பறி கொடுத்தோம்! இங்கே உன்னைப் பறி கொடுத்தோம்! இனி நாங்கள் ஒரு நிமிஷமும் உயிரோ டிருப்போ மென்று நினைக்காதே!” என்று பிரலாபித்து தேம்பித்தேம்பியழுது அனலிடு மெழுகாய் உருகினாள். அதைக் கண்ட சாம்பசிவம், கிட்டன், ரெங்கராஜு முதலிய யாவரும் தம்மை மறந்து ஓவெனக் கதறி அழத்தொடங்கினர். அது வைத்தியசாலை யென்பதையே அவர்கள் மறந்து விட்டனர். அந்தப் பெருத்த கூக்குரல் நெடுந்துாரம் கேட்டது.

அடுத்த நிமிஷத்தில் பெரிய டாக்டர் துரை, “என்ன இது? என்ன இது?” என்று சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்து, அவர்களது அழுகைக்கு சடக்கென்று முற்றுப்புள்ளி வைத்தார்; என்றாலும் டிப்டி கலெக்டர் அவ்வூரில் முக்கியமான உத்தியோகஸ்தராதலாலும், அவரது துக்ககரமான விபத்தைக் கருதியும் டாக்டர் அவர்களைக் கண்டியாமல் டிப்டி கலெக்டருக்கு வந்தனம் செலுத்தினார். சாம்பசிவமும் டாக்டருக்கு வந்தனம் செய்து, தமது மனைவியின் கதி எப்படி முடியுமென்று கேட்டார். துரை மிக்க இரக்கமான குரலில், “ஐயா! தங்களுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி நான் மிகவும் விசனமடைகிறேன். தங்கள் மனைவியின் தேகநிலைமை முற்றிலும் நம்பிக்கையற்றதாயிருக்கிறது. திருடர் முரட்டுத் தனமாகப் பல விடங்களில் அடித்துவிட்டார்கள். அதனால் மார்பில் இரண்டு எலும்புகள் முறிந்துபோய் ஹிருதயத்தில் குத்திக்கொண்டிருக்கின்றன. மார்பைக் கீறி ஆபரேஷன் செய்து அந்த எலும்புகளை மிகவும் சாமர்த்தியமாக எடுத்தா லன்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/109&oldid=1251988" இலிருந்து மீள்விக்கப்பட்டது