பக்கம்:மேனகா 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

மேனகா

தயவு செய்து வெளியில் வந்துவிடுங்கள்; கதவை மூடவேண்டும்" என்று நயமாகக் கூறினான். நால்வரும் அரை மனதோடு வெளியில் வந்தனர்; உடனே கதவும் சாத்தி மூடப்பட்டது.

வெளியில் போடப்பட்டிருந்த ஒரு விசிப்பலகையில் சாம்பசிவம் ஒய்ந்து உட்கார்ந்து கொண்டார். கனகம்மாள் தரையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டாள். கிட்டனும், ரெங்கராஜுவும் சிறிது துரத்தில் நின்றார்கள். யாவரும் கால் நாழிகை நேரம்வரையில் என்ன பேசுவதென்பதையறியாமல் ஏக்கங்கொண்டு திகைத்து உட்கார்ந்து விட்டனர். எதற்கும் அஞ்சாத தீரரான சாம்பசிவம் செயலற்று தமது பெருமையை இழந்து ஒரே நாளில் சாதாரண மனிதராய் மாறி, பெருத்த துன்பங்களுக்கும் துயரத்திற்கும் ஆளாய், ஒய்ந்து பரதேசியைப் போல உட்கார்ந்திருந்ததைக் காண, ரெங்கராஜுவின் மனம் பதறியது. அவன் உள்ளத்திலிருந்து பொங்கி யெழுந்த பல உணர்ச்சிகளால் அவனது கண்ணிமைகள் உதடுகள் முதலியவை காற்றிலசையும் மாந்தளிர்போலத் துடித்தன. சாம்பசிவமும் கனகம்மாளும், பல நாட்களாக போஜனம் செய்யவில்லை யென்பதை அவர்களது விகாரமான தோற்றமே எளிதில் காண்பித்தது. ரெங்கராஜு கனகம்மாளை நோக்கிப் பணிவாக, “பெரியம்மா பட்டணத்தில் குழந்தை சவுக்கியமா?” என்று அந்தரங்கமான அபிமானத்தோடு கேட்டான். அவன் அன்பின் பெருக்கினால் கேட்ட கேள்வி அவர்களுக்குப் பெருத்த துன்பமாய் முடிந்தது. சிலநாழிகையாக மறந்திருந்த சென்னையின் நினைவு அவர்களிருவரது மனதிலும் உடனே திரும்பிவிட்டது; முதல் நாள் சம்பவித்த விஷயங்கள் யாவும் அப்போதே கண்ணெதிரில் நடப்பனபோல் அவர்களுக்குத் தோன்றின; அப்படியே மெய்ம்மறந்து கல்லாய்ச் சமைந்து போயினர்; தனது கேள்விக்கு மறுமொழி இல்லாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/111&oldid=1251990" இலிருந்து மீள்விக்கப்பட்டது