பக்கம்:மேனகா 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

11

வருந்துவாளா? தான் உண்ணும் கவளத்தையும் தனது புத்திரிக்கு அருமையாக ஊட்டி உயிரை போல மதித்து வளர்த்துக் கல்வி முதலிய சிறப்புகளை யுண்டாக்கி ஏராளமான செல்வத்தையும் வாரிக்கொடுத்து இன்புறும் பொருட்டு கணவன் வீட்டுக்குத் தன்னை அனுப்பிய தந்தை அந்த வரலாறுகளைக் கேட்டு எவ்வாறு பொறுப்பாரோ, அல்லது மனமுடைந்து மரிப்பாரோ வென்னும் நினைவினால் வருந்துவாளா? எதைக் குறித்து வருந்துவாள்? எதை மறந்திருப்பாள்? அத்தனை நினைவுகளும் ஒன்றன் பின் னொன்றையும், ஒரே காலத்திலும் மகா உக்கிரமாக எழுந்து அவளது மனதை அழுத்தி ஒவ்வொன்றும் முதன்மை பெற நினைத்து உலப்பியது. பல மலைப்பாம்புகள் ஒரு ஆட்டுக்கடாவின் உடம்பில் கால்முதல் நெஞ்சுவரையிற் சுற்றிக்கொண்டு தயிர் கடைவதைப்போல அது திணறிப்போம் படி அழுத்தி அதன் எலும்புகளை யெல்லாம் நொறுக்குதலைப் போல அவளது மனதை அத்தனை எண்ணங்களும் கசக்கிச் சாறு பிழிந்தன.

அந்த நிலைமையில் அவளது சகோதரி அலிமா என்பவள் அப்போதைக்கப்போது அங்கு தோன்றி உணவருந்த வரும்படி அவளை அழைத்தனள். நூர்ஜஹான் தனக்குப் பசியில்லை யென்று சொல்லி அவளை அனுப்பிவிட்டுத் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். இரண்டொரு நாழிகைக்கொருமுறை மேனகாவின் கண்கள் திறக்கும் போது, அவளுக்கு மருந்து கொடுக்க முயன்றும், ஏதாயினும் ஆகாரம் கொள்ளும்படி அவளை வேண்டியும், அவளுக்குக் குணமுண்டாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் புரிந்தவண்ணம் இருந்தாள். அவள் கண்களை மூடிய பிறகு, இவள் தனது விசனங்களான படைகளால் தாக்கப்பட்டு, அதைப் பொறாமல் தத்தளித் திருந்தாள். பூங்கொம்பிலிருந்து பூக்களும் பனித்திவலைகளும் உதிர்தலைப்போல, அவளது கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கீழே வீழ்ந்து, பெருகி, அவளது ஆடைகளை நனைத்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/13&oldid=1251477" இலிருந்து மீள்விக்கப்பட்டது