பக்கம்:மேனகா 2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மேனகா

துக்கமும், வெட்கமும் ஆத்திரமும் பொங்கி யெழுந்து வதைத்தன. தேம்பித் தேம்பி அழுது நெடுமூச்செறிந்து உயிர்சோர ஒய்வடைந்து உயிரற்ற ஒவியம் போல இருந்தாள். அன்றைப் பகல் முற்றிலும் தண்ணீரும் அருந்த நினைவு கொள்ளாமல் துயரமே வடிவாக உட்கார்ந்திருந்தாள். வஞ்சகனான தனது கணவன் முகத்தில் தான் இனி எப்படி விழிப்பதென்றும், அவனுடன் எப்படி வாழ்வதென்றும் நினைத்து அவனிடம் பெருத்த அருவருப்பை அடைந்தாள். தனது துர்பாக்கியத்தை நினைத்துத் தன்னையே வைதுகொண்டாள். தனது தந்தையினிடத்தில் விஷயங்களை வெளியிட்டு தனது கணவனை இழிவு படுத்தவும் அவளுடைய பேதை மனது இடங்கொடுக்க வில்லை. ஆனால் அவரது உதவியினாலேயே மேனகாவை அவளது கணவனிடம் திருப்திகரமாகச் சேர்க்க முயலவேண்டும்; தனது கணவன் குற்றத்தைக் கூடிய வரையில் மறைத்துக் குறைவுபடுத்திக் கூறுவ தென்றும், மேனகா தனது கணவனை யடைந்தவுடன், தான் விஷத்தைத் தின்று உயிரை விட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டாள். அன்று மாலையில் டாக்டர் துரைஸானி வரவில்லை. அவள் தவறாமல் காலையில் வருவதாயும், அது வரை கவலைப்படாமல் அதே மருந்தை பிரயோகிக்கும்படியும் செய்தி சொல்லியனுப்பினாள்.

அதைக்கேட்ட நூர்ஜஹான், மேலும் துன்பக்கடலில் ஆழ்ந்தனள், மறுநாட்காலையில் துரைஸானி வரும்வரையில், மேனகா பிழைத்திருப்பாளா வென்று பெரிதும் அஞ்சினாள். வேறு துரைஸானி யொருத்தியைத் தருவிக்கலாமா வென நினைத்தாள். ஆனால், அந்த இரகசியங்களைப் பலருக்குத் தெரிவிப்பது தவறென எண்ணினாள். இத்தகைய எண்ணிறந்த வேதனைகளில் ஆழ்ந்து அன்றிரவையும் ஊணுறக்க மின்றிப் போக்கினாள். அவளது சகோதரியும் அவளுடன் அன்றிரவு முற்றிலுமிருந்து அவளை உண்ணும்படியும், சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/14&oldid=1251478" இலிருந்து மீள்விக்கப்பட்டது