பக்கம்:மேனகா 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

133

சாப்பாட்டிலும், வேறு எந்த விஷயத்திலும் புத்தி செல்லவில்லை; அன்று சாயுங்காலத்திற்குள் சாம்பசிவம் வரவேண்டுமே என்றும், அவர் பணத்துடன் வரவேண்டுமே என்றும் அவர்கள் எண்ணி எண்ணி ஆவல் கொண்டு ஒய்ந்து உட்கார்ந்து விட்டார்கள். அப்போது கிட்டன், “ஏன் பாட்டீ, இந்த டாக்டர் கொஞ்சமும் இரக்கமற்ற பாவியா யிருக்கிறானே; வேறு யாரிடத்திலாவது கொண்டுபோனால் என்ன?” என்றான்.

உடனே கனகம்மாள், “சேச்சே! அது பிசகு, இந்த ஆபரேஷன் செய்வதில் இவரைப்போல சாமர்த்தியமாகச் செய்பவர் எவருமில்லையாம். இவருக்குச் சிபாரிசுக் கடிதம் கொண்டுவந்தோம்; இவரே இவ்வளவு அலட்சியம் செய்கிறாரே, இன்னும் மற்றவர்கள் வாயைத் திறந்து பேச கூடமாட்டார்கள்; இருக்கட்டும்; சாயுங்காலத்துக்குள் அவன் வந்து விடுவான்; துரையும் ஏதோ மருந்து கொடுத்திருக்கிறாரே; பார்ப்போம்” என்று கூறினாள். அன்று பகற்பொழுது முற்றிலும், சாம்பசிவம் இந்த வண்டியில் வருவார், அடுத்த வண்டியில் வருவார் என்று சொல்லிச் சொல்லி வழிபார்த்துக் கொண்டே அவர்கள் இருந்தனர். பார்க் என்னும் ரயில்வே ஸ்டேஷன், சத்திரத்திற்குப் பின்புறத்தில் இருப்பதால், ஒவ்வொரு வண்டியும் வந்தபோதெல்லாம், ரெங்கராஜு ஸ்டேஷனுக்குப் போய் விட்டு ஏங்கிய முகத்தோடு திரும்பினான். இரவு மாத்திரம் வந்தது; சாம்பசிவம் வரவில்லை. கனகம்மாள், கிட்டன், ரெங்கராஜு ஆகிய மூவரும் நெருப்பின்மேற் புழுவெனத் துடிக்கின்றனர். கைகளைப் பிசைந்து கொள்ளுகின்றனர். அன்று மாலைக்குள் ஆபரேஷன் செய்யாவிடில் தங்கத்தின் உயிர் நின்று போய்விடுமோ வென்று அஞ்சித்தவித்தனர். அப்போதைக்கப் போது தங்கம்மாளின் நாடியை கனகம்மாள் பிடித்துப் பிடித்துப் பார்த்தாள் வரவர நாடி தடதடவென்று அடித்துக் கொண்டது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/134&oldid=1252016" இலிருந்து மீள்விக்கப்பட்டது