பக்கம்:மேனகா 2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

மேனகா

மரணகாலத்திலிருப்போரது நாடி அவ்வாறு விசையாக அடித்துக்கொள்வது வழக்கமென்று கனகம்மாள் கேள்வி யுற்றிருந்தாள் ஆதலின், அவளது மனம் பட்டபாட்டையும், அதன் தவிப்பையும் விவரித்துக் கூறுதல் எளிய காரியமல்ல. அவள் அனுபவித்த துன்பத்தை நரக வேதனை என்றே சொல்ல வேண்டும். அந்த நிலைமையில் பொழுதும் விடிந்தது; சாம்பசிவமோ வருவதாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு ரயிலும் மோசம் செய்துவிட்டது. ஆனால், தங்கம்மாளின் உயிர் இன்னும் தேகத்தில் நின்றது; இனி தாமதமின்றி ஆபரேஷன் செய்யாவிடில் அன்று தங்கம்மாளது உயிர் போவது நிச்சயமென்று கனகம்மாள் நினைத்தாள். அன்று மாலைக்குள் தங்கம்மாள் பிழைப்பாளோ அல்லது பட்டணத்து மண்ணுக்கு இரையாவாளோ என்று அவள் நினைத்து நினைத்து மனமாழ்கினாள், தங்களது எதிர்காலத்து சந்தோஷமும், துயரமும் அந்த ஒருநாளிலேதான் தெரிய விருந்ததாக எண்ணி யெண்ணிப் பரிதபித்தாள். அந்த நிலைமையில் கதவைத் திறந்துகொண்டு டாக்டர் வில்லியம்ஸ் உள்ளே நுழைந்தார். உள்ளே யிருந்த மூவரும் திடுக் கிட்டெழுந்து நின்றனர். கிட்டன் துரைக்கு வந்தனம் செலுத்தினான். உடனே டாக்டர், “நேற்று சாயுங்காலமே இந்தப் பெண்ணின் புருஷன் வருவதாகப் பொய் சொன்னீர்களே; என்னை ஏமாற்றத் தானே பார்த்தீர்கள்?” என்றார். அதற்கு மறு மொழி கூற எவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை. கனகம்மாள் சிறிது தத்தளித்த பிறகு, “ஐயா! எங்களுக்கு இது பொல்லாத காலமாயிருக்கிறது; நினைக்காத ஆபத்துகளெல்லாம் வருகின்றன. பணத்தோடு நேற்று சாயுங்காலத்துக்குள் வருவதாகச் சொன்ன பையன் வரவில்லை. அவனுக்கு என்ன துன்பம் சம்பவித்ததோ தெரியவில்லை. அவனைத் தேடிப் பார்த்து அழைத்து வரும்படி மனிதரை அனுப்புகிறேன். பெண்ணுக்கு அதற்குள் உயிர் போய்விடுமோ வென்று பயமாக இருக்கிறது. பெரிய மனதோடு நீங்கள் இவளுடைய உயிரைக் காப்பாற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/135&oldid=1252017" இலிருந்து மீள்விக்கப்பட்டது