பக்கம்:மேனகா 2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

மேனகா

போலத் தோன்றியது. அவன் தன்னை உற்று நோக்கியதைக் கண்ட அப்பெண்மணி, சுருக்கென எழுந்து கட்டிலிற்கருகில் நெருங்கி நின்று, “என்ன வேண்டும்?” என்று அன்பொழுகக் கேட்டாள். அவளது குரல் அமுதம் சொரியப்படுதலைப்போல செவிகளுக்கு இனிமை பூட்டியது. வராகசாமி உடனே தனது கண்களை மூடிக்கொண்டான். உலகிலுள்ள பெண்கள் யாவரும் கற்பென்பதே அற்ற வஞ்சகரென்று நினைத்து அவன் அருவருப்புற்று அவளது முகத்திலும் விழிப்பது பாபமென உறுதியாக எண்ணி யிருந்தவனாதலின், அவன் தனக்கருகில் பூரண சந்திரோதயம்போலக் காணப்பட்ட கட்டழகியை, கூற்றுவனிலும் கொடியவளென மதித்து தனது கண்களை இறுக மூடிக்கொண்டான். நிற்க, இவன் இந்திய மாதரைக் காட்டிலும், ஐரோப்பிய மாதர் மீது அதிகமான பகைமை கொண்டிருந்தான். ஏனெனில், ஐரோப்பிய மாதர் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னும் பெண் தன்மைகளை விடுத்து அன்னிய மனிதரோடு பழகி நமது தேசத்துப் பெண்களுக்குத்துர் ஆசாரங்களில் ஆசை யுண்டாகும்படி செய்கிறார்களென்ற நினைவைக் கொண்டவனாதலின், அவன் வெள்ளைக்கார மகளிரை விஷத்தினும் கொடியவரென நினைத்து அவர்களின் மீது தீராப்பகைமை கொண்டிருந்தான். ஆதலின், அவளது அன்பு நிறைந்த கேள்வி அவனது மனதின் அமைதியைக் குலைத்துப் புண்படுத்திவிட்டது. அவன் திரும்பவும் களைப் படைந்து கண்களை மூடிக்கொண்டு அயர்ந்தான். அருகில் நின்ற வெள்ளைக்கலை உடுத்திய வெள்ளை மடவன்னம், பஞ்சினும் பூவிதழ்களினும் மிருதுவான தனது கரத்தால் அவனது நெற்றி, கன்னங்கள் முதலியவற்றைத் தடவினாள். ஜூரநோய் கொண்டவன் மார்பில் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, பன்னீர் முதலியவை கலக்கப்பட்ட சந்தனம் பூசப்படுதலைப்போல அந்த வருடல் அவனை இன்பக் கடலில் ஆழ்த்தியது ஆயினும், தெய்வகானம் போன்ற அவளது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/149&oldid=1252163" இலிருந்து மீள்விக்கப்பட்டது