பக்கம்:மேனகா 2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

151

அயர்வின்றி எப்போதும் மாறுபடா ஆதாரத்தோடு அவனைக் குணப்படுத்த முயன்றுகொண்டிருந்தாள். அவளாற் செலுத்தப் படும் மருந்து அவனது பலஹீனத்தைப் போக்கடித்து அங்கங்களுக்கு வலுவூட்டிக்கொண்டே வந்தது. முதலில் அடிக்கடி உண்டான சோர்வும், உறக்கமும் நெடுநேரம் இடைவிட்டு வரத் தொடங்கின. அவளால் திரும்பிக் கொணரப்படும் நல்ல நிலைமை, அவன் அவளைப் புார்த்த மாத்திரத்தில் கெட்டுப்போய்க்கொண்டிருந்தது. அவளைக் காணும்போதெல்லாம் அவனது மனதில் பழைய நினைவுகளே தோன்றி வதைத்தன. முற்றிலும் வஞ்சகியான தனது மனைவி மேனகா தஞ்சையிலிருந்து தனக்கு அனுப்பிய கடிதத்தை தான் உண்மையென்று நம்பி ஏமாறிப்போனதை நினைத்து நினைத்து தனது மூட மதியை நிந்தித்துக்கொண்டான்; அவள் கல்லால் அடிபட்டு இறவாமல் தப்பி இன்னமும் உலகில் உயிருடன் இருப்பதை நினைத்து ஆத்திரங்கொள்வான். தான் முற்றிலும் குணமடைந்து வெளியிற்போன பின் எப்பாடு பட்டாகிலும் அவளைக் கண்டுபிடித்து அவளைக் கொன்று விட்டு தானும் விஷத்தைத் தின்று மறிப்பதே முடிபென உறுதி செய்துகொண்டான். அவள் உயிருடனிருக்கும் வரையில் தனக்கும், தனது குடும்பத்திற்கும் நீங்காத அவமானமே உண்டாகுமென்று நினைத்துத் துடி துடித்தான். அவளைக் கொன்ற பின் தான் உயிர் வாழ்வதில் பயனில்லை யென்று நினைத்தான்; தான் அப்புறம் இன்னொரு பெண்பேயை மணக்கநேருமென்றும், அவளும் மேனகாவைப்போலவே வேசையாயிருப்பாள் என்றும் நினைத்தான். அப்போது கண்கள் தாமாகத் திறந்துகொள்ளும். உடனே எதிரிலிருந்த வெள்ளைக் காரப் பெண்ணின்மீது அவனது திருஷ்டி படும்; அவள் மகாபரிசுத்தமான குணவொழுக்கம் உடையவளைப்போல அன்பேவடிவாக உட்கார்ந்திருப்பதை அவன் காண்பான். அது புண்ணில் மிளகாய் விழுதை அப்புதலைப்போல இருக்கும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/152&oldid=1252167" இலிருந்து மீள்விக்கப்பட்டது