பக்கம்:மேனகா 2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

மேனகா

சிக்ஷிக்கப்படுகிறார்களென்று நாம் நினைப்பது தருமமாகுமா? இப்போது நீங்கள் மோட்டார் வண்டியில் அகப்பட்டுக் கொண்டு பிழைக்கக்கூடாத நிலைமையிலிருந்து பிழைத்தீர்களே! நீங்கள் செய்த ஏதோ குற்றத்துக்கு இது தண்டனையென்று நினைத்து மற்ற ஜனங்கள் சும்மா இருந்து விட்டார்களா? இம்மாதிரி நாம் செய்வதானால், உலகத்தில் துன்பம் அனுபவிக்கும் எவனையும் பிறன் காப்பாற்றவே கூடாது. ஏழைகளுக்குப் பிச்சையிடுவது கூடாது. ஏனெனில், அவர்கள் செய்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு உதவி செய்வது, கடவுளின் விருப்பத்துக்கு விரோதமான காரியமாகிறது. நீங்கள் பெருத்த வக்கீலென்று சொல்லுகிறார்கள். சட்டங்களையும் நியாயத்தையும் நன்றாக நீங்கள் படித்திருப்பீர்கள். உங்களுக்கு நான் அதிகமாகச் சொல்லக்கூடாது. டாக்டர் துரைஸானியம்மாளிடம் சாமாவையரென்பவர் உங்களிடமிருந்த கடிதங்களின் விவரங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். கடித விஷயமாக நீங்கள் ஆத்திரப்பட்டு, தற்கொலை செய்து கொள்ளப் போய் மோட்டாரில் வீழ்ந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்; இவைகளைக் கேட்டவர்கள் யாவரும் நீங்கள், விஷயங்கள் பொய்யா, மெய்யா வென்பதை ஆய்ந்தோய்ந்து பாராமல் தற்கொலை செய்துகொள்ள முயன்றதைப்பற்றி உங்கள் மேலே தான் குறை சொன்னார்கள்” என்றாள்.

அதைக் கேட்ட வராகசாமி வியப்பும் அவமானமும் அடைந்து, “கடிதங்களின் ரகசியத்தை எல்லோரிடமும் வெளியிட்டுவிட்டானா அந்த மடையன்! அவனுக்குப் புத்தியே கிடையாது” என்ற வண்ணம் தனது கைகளால் முகத்தை மூடிக்கொண்டு கால் நாழிகை நேரம் மெளனமா யிருந்தான். அவன் மேனகாவின்மீது கொண்டிருந்த கோபம் பொங்கி யெழுந்தது; அவளால் உண்டான மானக்கேட்டை அறிந்த அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/163&oldid=1252183" இலிருந்து மீள்விக்கப்பட்டது