பக்கம்:மேனகா 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

15

அவள், “ஆகட்டும்” என்று தலையை அசைத்தாள். அருகிலிருந்த, மெத்தை தைக்கப்பட்ட அழகான சாய்மான நாற்காலி யொன்றைக் கட்டிலிற்கு அருகில் இழுத்தாள். அதன் கால்களில் சகடைகளிருந்தமையால், அது ஒசையின்றி எளிதில் வந்தது; உடனே மேனகா தானே எழுந்து விடுவதாய்க் கூறித் தனது உடம்பை நிமிர்த்தி எழுந்திருக்க முயன்றாள். ஆனால், தேகம் கட்டிலும் நில்லாமல் கீழே தள்ளிவிட்டது. பொத்தென்று தரையில் வீழ்ந்து விட்டாள். அதைக் கண்டு சகியாத நூர்ஜஹான் பெரிதும் திகிலடைந்து பாய்ந்து, குழந்தையை எடுப்பதைப் போல வாரி எடுத்துச் சாய்மான நாற்காலியில் விடுத்தாள். அவளின் மஸ்லின் உடையை ஒழுங்காக அணிவித்தாள். உடம்பில் கசிந்த வியர்வையைத் தனது பட்டுத் தாவணியால் துடைத்த பின்னர் அந்த அறையை விட்டு வெளியிற் சென்றாள். உடனே ஒரு பிராம்மணப் பரிசாரகன் வெள்ளிச் செம்பில் வென்னீர், பற்பொடி முதலியவற்றை உட்புறம் கொணர்ந்து, அவளுக் கெதிரிலிருந்த மேஜையைச் சுத்தம் செய்து, அதன் மீது வைத்து விட்டு வெளியிற் சென்றான். அதைக் கண்ட மேனகா திடுக்கிட்டு அவனை உற்று நோக்கி மிகவும் வியப்படைந்தாள். தன் விஷயத்தில் அந்த மகம்மதியப் பெண் அளவிறந்த அபிமானத்தையும், அன்பையும் கொண்டு செய்துள்ள ஏற்பாடுகளைக் கண்டு நன்றி சுரக்கப் பெற்றவளாய் அவளது வருகையை ஆவலுடன் எதிர் பார்த்தாள். அடுத்த நொடியில் நூர்ஜஹான் உள்ளே துழைந்து, "அம்மா! முகத்தைச் சுத்தம் செய்து கொள்” என்றாள்.

மேனகா:- “ஆகா! என் விஷயத்தில் நீ எவ்வளவு பாடுபடுகிறாய்! என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறாய்! உனது மனப்பூர்வமான அன்பைக் காண என் ஹிருதயம் பொங்கி எழுகிறது. ஆனால், இத்தனையும் விழலுக் கிறைத்த நீராயிருக்கிறதே யென்றுதான் ஒரு விதமான விசனம் என்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/17&oldid=1251481" இலிருந்து மீள்விக்கப்பட்டது