பக்கம்:மேனகா 2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

மேனகா

அக்காளான பெருந்தேவியம்மாள் என்பவளும், அவளுடைய வீட்டிற்கு அடுத்த வீட்டிலுள்ள சாமாவையர் என்பவரும், நாடகம் பார்க்கப்போவதாய்க் கூறி வஞ்சித்து அங்கப்ப நாயக்கன் தெருவில்-கதவிலக்கமுள்ள வீட்டிலிருக்கும் நைனா முகம்மது மரக்காயரிடம் ரூ. 10,000-க்கு விற்றனர். அவன் அந்தப் பெண்ணிடம் காமாதுர நோக்கங் கொண்டு அவளைக் கற்பழிக்க முயலுகையில், அவள் கூச்சலிட்டு அங்கே அகப்பட்ட பழம் நறுக்குங் கத்தியால் தன்னைக் குத்திக் கொள்ள முயன்றாள். வீட்டிற்குள்ளிருந்த எனது குமாரத்தியும், மேற் குறிக்கப்பட்ட நைனாமுகம்மது மரக்காயரின் மனைவியுமான நூர்ஜஹான் பீபி அவ்விடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை விடுவித்து என்னுடைய பங்களாவிற்கு அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாள். அந்தப்பெண் பெருத்த பயத்தினாலுண்டான அதிர்ச்சியால் ஜுரநோய்கொண்டு என்னுடைய பங்களாவில் இருக்கிறாள். மேற் குறிக்கப்பட்ட மூன்று மனிதரும், இந்தியன் பீனல்கோட் 366-வது பிரிவுப்படி ஒருவருடைய மனைவியை வஞ்சகமாக விபச்சாரத்தின் பொருட்டு அபகரித்துப் போய் விற்றதும் வாங்கியதுமான குற்றத்தைச் செய்திருக்கிறார்கள். (Offence of Kidnapping a married woman for illicit intercourse) இந்த விஷயத்தில் நீர் உடனே தக்க விசாரணைகளைச் செய்து குற்றவாளிகளான மூவரையும் கைதியாக்கி சிறைப்படுத்த வேண்டியது.

பெரியதம்பி

-என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை நைனா முகம்மது முற்றிலும் படித்தான். அவனது மனம் மிகவும் குழம்பியது. பயத்தினால் கைகால்கள் நடுங்கின. முகத்தில் பிணக்களை தோன்றியது. அவன் தனது கண்களை நம்பாமல் கடிதத்தை மேலும் இரண்டு முறை படித்தான். எழுத்து தனது மாமனாருடைய எழுத்தே என்பது நிச்சயமாகத் தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/183&oldid=1252342" இலிருந்து மீள்விக்கப்பட்டது