பக்கம்:மேனகா 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

183

போலீஸ் ஸ்டேஷன் முத்திரையும் அதில் பதிந்திருந்தது. அவர் முதல்தரமான மந்திரவாதி என்று நினைத்து அவன் அப்படியே மயங்கிப்போய் தடை கட்டப்பட்ட நாகப் பாம்பைப்போல அசைவற்று பிரமை கொண்டு விழித்தான். தனது மனைவி எல்லா விஷயங்களையும் தனது தகப்பனாரிடம் சொன்னா ளென்பதும், அவர் தன்னிடம் சிறிதும் தாட்சணிய மின்றி பிராது எழுதியனுப்பிவிட்டாரென்பதும் சந்தேகமறக் கண்ணெதிரில் ருஜுவாய்ப் போயின. அந்த ஆபத்து வேளையில் தான் என்ன செய்வதென்பதை அறிய மாட்டாமல் அவன் விழித்து மந்திரவாதியின் முகத்தை நோக்கி, “இவைகளிலிருந்து நீங்கள் தான் என்னை மீட்க வேண்டும்” என்று கூறி சலாம் செய்து அவரை வேண்டிக் கொண்டான்.

மந்திர:- “ஐயா! இதைப்பற்றி நீர் சிறிதும் கவலைகொள்ள வேண்டாம். இன்று ஒரு பொழுது பொறுத்துக் கொண்டிருந்து நாளைக்குக் காலையில் என்ன நடக்கிறதென்பது பாரும்; நீங்காத விபத்துக்களையெல்லாம் நீங்கவைத்து, பணியாத வர்களைப் பணியச் செய்வேன்; இன்று இரவில் பதினைந்து நாழிகை சமயத்தில் நான் சுடுகாட்டுக்குப் போய் ஜெபித்து காவு கொடுத்து பாதாள எட்சினியை உச்சாடனம் செய்துவிடுகிறேன். நீர் இன்றிரவே உம்முடைய வீட்டுக்குப் போய்ச் சேரும்; நாளைக்குக் காலையில் உம்முடைய மாமனாரும், மனைவியும் உம்மிடம் வந்து உம்முடைய காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்பதன்றி, அவர்கள் நீர் சொல்லுவது போல இனி எப்போதும் ஆடுவார்கள். நீர் எத்தனை வைப்பாட்டியை வைத்துக்கொண்டாலும், அவர்கள் அதற்கு அநுசரணையாகவே இருப்பார்கள். தவிர, மகா பதி விரதையைப் போல நடித்த அந்த பார்ப்பாரப் பெண்ணையும் வசியம் செய்து வைக்கிறேன். அவள் இனிமேல் தன்னுடைய வீட்டையும் புருஷனையும் நினைக்காமல் நீயே கதியென்று வந்து உம்மிடம் சேரும்படி செய்துவிடுகிறேன் போதுமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/184&oldid=1252343" இலிருந்து மீள்விக்கப்பட்டது