பக்கம்:மேனகா 2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

மேனகா

ஒரு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, தனது பைக்குள்ளிருந்த ஒரு காகிதத்தையும் பென்சிலையும் எடுத்து, சாமாவையர், பெருந்தேவியம்மாள் ஆகிய இருவரும் எழுதிக் கொடுக்க வேண்டிய கடிதத்திற்கு ஒரு நகல் தயாரித்து எடுத்துக் கொண்டு எழுந்து சிறிதுதுரம் நடந்து அப்பாற் சென்றார். அங்கு நின்ற குதிரை வண்டி யொன்றைக் கண்டு அதை திருவல்லிக்கேணிக்கு அமர்த்திக்கொண்டு சென்றார். வண்டி பகல் பதினோரு மணிக்கு தொளசிங்கப்பெருமாள் கோவில் தெருவில் உள்ள சாமாவையரது வீட்டு வாசலில் அவரை விட்டுச் சென்றது. மந்திரவாதி அநத் வீட்டின் நடையில் நின்ற வண்ணம், “சாமி! சாமி!” என்று கூப்பிட்டான். உட்புறத்திலிருந்த சாமாவையரின் மனைவி மீனாrயம்மாள், “யார் அங்கே?” என்று கேட்டுக் கொண்டு நடைக்கு வந்தாள்.

மந்திரவாதிக்கும் மீனாக்ஷியம்மாளுக்கும் நடந்த சம்பாஷணையை விவரிக்குமுன், சாமாவையரைப்பற்றிய விவரங்கள் யாவற்றையும் கூறுதல் அவசியமாகிறது. திருவாரூரில் தாசி கமலத்தின் வீட்டில் கள்வர்களிடம் அகப்பட்டு, இரவில் தண்டவாளத்தில் கட்டப்பட்ட சாமாவையர், சாக்கு மூட்டைக்குள் உருண்டை வடிவமா யிருந்து ஹடயோகம் செய்துகொண்டிருந்தார். எந்த நிமிஷத்தில் இரயில் வண்டி தம்மீது ஏறுமோ, அருமையாக ஊட்டி வளர்த்த தமது அழகிய தேகம், எந்த நொடியில் சக்கரங்களுக்கு இரையாகுமோ என்று நினைத்து, பெருத்த திகிலும் அச்சமுங் கொண்டு மரணவேதனை அநுபவித்திருந்தார். அவரது வாய்க்குள் பெருத்த துணிப்பந்து வலுவாக நழைந்து கொண்டிருந்தமையால், கன்னம் தொண்டை முதலியவை எப்போது கிழிந்துபோகுமோ வென்னும் நிலைமையில் இருந்தமையால், அவரது முகத்திலிருந்த இரத்தக் குழாய்களும் நரம்புகளும் விண்விண்ணென்று தந்தி மீட்ட ஆரம்பித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/189&oldid=1252348" இலிருந்து மீள்விக்கப்பட்டது