பக்கம்:மேனகா 2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

187


அந்த யோசனையைக் கேட்ட நைனா முகம்மது மிகவும் மகிழ்ச்சியடைந்தான். தனக்கு எவ்வகையான துன்பமுமின்றி எல்லா விஷயங்களையும் எளிதில் முடித்துத் தனது துன்பங்களை யெல்லாம் தீர்த்துவைக்கும்படி நல்ல சமயத்தில் அந்த மந்திரவாதி வந்ததைக் குறித்து ஆநந்தங் கொண்டான்; தான் மிகவும் நற்குணமுள்ளவனாதலாலும், பலருக்கு உதவி செய்பவனாதலாலும் ஆண்டவன் தனது ஆபத்தில் அந்த மந்திரவாதியை அனுப்பி உதவி செய்திருக்கிறாரென்று நினைத்துக் கொண்டான்; உடனே எழுந்து அங்கிருந்த காகிதத்தை எடுத்து அவ்வாறே சாமாவையருக்கு ஒரு கடிதம் எழுதி அதை மந்திரவாதியினிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட மந்திரவாதி உடனே தனது கண்களை மூடிக்கொண்டு ஞானதிருஷ்டியால் எதையோ பார்த்தார்; “சரி சாமாவையர் இப்போது அவருடைய வீட்டிலேதான் இருக்கிறார்; இன்னம் அரை நாழிகையில் வெளியில் போய்விடுவார்; அதற்குள் நான் அவரிடம் போய்க் காரியத்தை முடிக்கிறேன்; இன்று இரவில், நான் சுடலைக்குப் போய் ஜெபம் செய்யப்போகிறேன்; நாளைக்குக் காலையில் அவர்கள் மூவரும் உம்முடைய வீட்டிக்கு வந்து சேருவார்கள். நானும் அப்போது வந்து சாமாவையரால் கொடுக்கப்பட்ட பத்திரத்தைக் கொணர்ந்து கொடுக்கிறேன்” என்று சொல்லி விட்டு மந்திரவாதி எழுந்து உத்தரவு பெற்றுக் கொண்டு வெளியிற் சென்றார். நைனாமுகம்மது தனது அதிர்ஷ்டத்தை நினைத்து நினைத்து மனக்கிளர்ச்சியும், பூரிப்பும் அடைந்தவனாய் எழுந்து அறையில் உல்லாசமாக உலாவி மேல் நடக்க வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி திட்டங்கள் போட்டுக்கொண்டு அன்றைப் பொழுது கழியவேண்டுமே என்று ஆவல் கொண்டு பொழுதைப் போக்கினான்.

அவன் அவ்வாறிருக்க, அந்த வீட்டை விட்டு வெளியில் வந்த மந்திரவாதி, இரண்டு மூன்று வீடுகளுக்கப்பால் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/188&oldid=1252347" இலிருந்து மீள்விக்கப்பட்டது