பக்கம்:மேனகா 2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

மேனகா

கூடுமோ வென்று நினைத்து உருள நினைத்தார். மூட்டை தண்டவாளத்தோடு இறுகப் பிணைக்கப்பட்டிருந்தமையால், அவரது தேகம் சிறிதும் அசையவில்லை. “ஐயோ! இந்த ஒயா மரணவேதனையிலிருந்து தத்தளிப்பதை விட உடனே உயிரை விடுவதே நல்லது” என நினைக்கிறார். இரயில் வந்து தம்மீது மோதி தமது உடம்பை ஒரே அடியில் சக்கைசக்கையாகக் கிழித்தெறிந்துவிடாதோ வென்று தபசு செய்கிறார். அடிக்கடி இரயிலின் ஒசை அருகிலுண்டானதேயன்றி அவரது கோரிக்கை நிறைவேறவில்லை; திருவாரூர் நான்கு வண்டிகள் வந்து கூடும் நாற்சந்திப்பு ஆகையாலும், சாமான் வண்டிகள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றப்படவேண்டு மாதலாலும், அருகிலிருந்த ஸ்டேஷனிலிருந்து வண்டிகளின் ஒசை கேட்டுக் கொண்டே இருந்தது. தஞ்சையிலிருந்து திருவாரூருக்கு இரயில் போகும் பாதையிலேயே தாம் கட்டப்பட்டிருப்பதாக அவர் நினைத்தார். ஆனால், அதில் நெடுநேரமாக இரயில் வராமையால், இரவு இரண்டு மணிக்குப் பிறகு அந்தப் பாதையில் வண்டி வருவதில்லையோ வென்று அவர் ஐயமுற்றார். ஆனால், விடியற்காலம் ஐந்து மணிக்கு, திருவாரூரிலிருந்து தஞ்சைக்கு இரயில் போவதென்பதை அவர் நிச்சயமாக அறிவார். அந்த நேரம் வரையில் தாம் இவ்வாறு நரகவேதனை அடைந்திருக்க வேண்டுமே என்று நினைத்து மனமுடைந்தவராய் ஏங்கிக் கிடந்தார். விடியற்காலம் வரும் வண்டியில் தாம் ஒருகால் அரைகுறையாக நசுக்கப்பட்டு, இன்னம் அதிகரித்த சித்தரவதையை அநுபவிக்க நேருமோ வென்னும் சந்தேகமும் அப்போதைக்கப்போது அவரது மனத்தில் எழுந்து வாட்டியது. முதல் நாள் காலையிலிருந்து இரவு ஒருமணி வரையில் தாம் அநுபவித்த சுகங்களையும் தாமிருந்த உன்னத நிலைமையைப் பற்றி எண்ணி எண்ணி அவர் பரிதபித்தார்; வெண்ணெய் திரளும் சமயத்தில் தாழி உடைதலைப்போல, தாம் பங்களாவை வாங்கி அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/191&oldid=1252350" இலிருந்து மீள்விக்கப்பட்டது