பக்கம்:மேனகா 2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

191

கமலத்தை வைத்துக் கொண்டு மகோன்னத தசையிலிருந்து சுகமதுபவிக்க நினைத்த காலத்தில், கள்வர் தோன்றி தமது எண்ணத்தில் மண்ணைப்போட்டு விட்டதைப்பற்றி நினைத்து நினைத்து அவர் உருகினார்; தமது அதிர்ஷ்டஹீனத்தையும் தம்மையும் மனங் கொண்டமட்டும் தூற்றிக்கொண்டார்; கள்வர் வந்தது கமலத்தின் தூண்டுதலினால் என்பதை அவர் நினைக்கவில்லை. அவர்கள் தற்செயலாக வந்தவர்களென்றே அவர் நினைத்திருந்தார். கொடியவர்களாகிய அக்கள்வர் தம்மை வதைத்ததைப்போல கமலத்தையும் அவளது தாயையும் கட்டிப்போட்டுவிட்டு, அவர்களது சொத்துக்களையெல்லாம் கொண்டுபோயிருப்பார் களென்று நினைத்து, அவர்களது விஷயத்தில் மிகுந்த இரக்கமும் விசனமும் கொண்டார். கண்கொள்ள வனப்பையும் மனங் கொள்ளாக் காதலையும் கொண்டு இரதி தேவி போலிருந்த அந்தப்பெண்ணின்மீது தாம் கொண்ட விருப்பம் நிறைவேறாமல் போனதை நினைத்து அவர் உருகினார்; விடியற்காலம் ஐந்து மணி சமயம் வரவேண்டுமே என்றும், வந்து விடுமே என்றும் அவர் மாறிமாறி நினைத்து சகிக்க வொண்ணாத் துன்பகரமான நிலைமையிலிருந்தார். விடியற்காலம் ஐந்து மணியும் கழிந்தது. இரயிலோ அவர்மீது ஏறவில்லை. ஆனால், அது சென்ற ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. அன்றைக்கு தமது அதிர்ஷ்டத்தினால், தாமிருந்த பாதை பழுதுபட்டுப்போனதோ வென்றும் நினைத்தார். பொழுது மேன்மேலும் சென்றது; கதிரவனும் குணதிசையில் எழுந்தான்; படிப்படியாக வெயிலும் அவரது உடம்பில் எரிக்கத் தொடங்கியது. பகலின் ஆரவாரமும், மனிதரின் பேச்சுக் குரலும் எங்கும் எழுந்தன. மனிதர் போவது வருவதுமா யிருந்தது, அவர்களது சம்பாஷணையால் புலப்பட்டது. அவர் உடனே கூச்சலிட முயன்றார்; அது பலிக்கவில்லை. அவர் மூட்டையாகக் கட்டப் பட்டுக் கிடந்ததை எவரும் கவனித்ததாகவும் தோன்றவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/192&oldid=1252351" இலிருந்து மீள்விக்கப்பட்டது