பக்கம்:மேனகா 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

195

தீர்மானித்துக் கொண்டார். அதன் பிறகு கால் நாழிகையில் கண்ணுச்சாமியும் கந்தனும் திரும்பி ஓடிவந்து, இரண்டு துணிகளையும் டிக்கட்டையும் அவரிடம் கொடுத்தனர். பரோபகார குணத்தையும் அன்பையுங் கண்ட சாமாவையர், “ஆகா! ஏழைகளே ஆபத்துக் காலத்தில் உதவி செய்பவர்கள். பணக்காரர்கள் கல் நெஞ்சர்கள்; அப்பா! உங்களுடைய நல்ல குணத்துக்கு, ஈசுவரன் ஒரு குறைவையும் வைக்கமாட்டான். நான் போய் உடனே பணத்தை அனுப்புகிறேன். எவ்வளவு பணம் அனுப்பவேண்டும்?” என்றார்.

கண்ணுச்சாமி, "எல்லாம் நாலேகால் ரூபா ஆச்சு சாமி” என்றான்.

சாமாவையர், "சரி; நான் நாகைப்பட்டணம் போனவுடன் தபாலில் ரூ.10 அனுப்புகிறேன். நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியவண்ணம் எழுந்து நின்று துணிகளை வாங்கியணிந்தார். டிக்கட்டை வாங்கிக்கொண்டு ஸ்டேஷனை நோக்கி நடந்தார். அந்த இரண்டு மனிதரும் அவர்மீது இரக்கங்கொண்டு அவரோடு வடவே சென்று அடுத்த இரயில் வருகிற வரையில் அவரோடு காத்திருந்து கும்பிடு போட்டு வழி யனுப்பிவிட்டுத் திரும்பினர். சாமாவையர் மறைந்து போனபின், கந்தன், “ஏண்டா கண்ணுச்சாமி ஐயரு பணம் அனுப்புகிறேன்னு சொன்னாரே, அவருக்கு நம்ப மேல் விலாசம் தெரியாதே, எப்பிடி அனுப்பப்போறாரு?” என்றான். அதைக் கேட்ட கண்ணுச்சாமிக்கும் அந்த விஷயத்தில் அப்போதுதான் பெருத்த சந்தேகம் உதித்தது; என்றாலும் அவன் தனது தைரியத்தை இழக்கவில்லை. “அடே! ஐயரு நல்லவருடா! பணத்தை எப்படியாவது கட்டாயம் அனுப்பு வாருடா! இல்லாமப் போனா நேருலேயாச்சும் வருவாருடா!” என்றான். கந்தசாமியும் அதை நம்பினான். அப்புறம் இருவரும் அதை மறந்து தமது வேலையைக் கவனித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/196&oldid=1252355" இலிருந்து மீள்விக்கப்பட்டது