பக்கம்:மேனகா 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

மேனகா


இரயிலில் சென்ற சாமாவையர் நாகைப்பட்டணம் போய், கப்பல் வியாபாரியிடத்தில், தமது பணம் களவாடப்பட்டுப் போனதாகக் கூறி, சென்னைக்குப் போகத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொண்டு, இரயிலேறினார்கள்; திருவாரூரிலிருந்து நாகைக்குப்போன போது அந்த இரண்டு மனிதரும் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்னும் நினைவோடுதான் அவர் சொன்னார். ஆனால், நாகைப்பட்டணம் போய் கப்பல் வியாபாரியிடத்தில் தமது சொந்த செலவுக்குப்பணம் கடனாக வாங்கிய போது, அந்த இரண்டு உபகாரிகளுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்பதை அவர் மறந்து விட்டார் ஆகையால், அவர்களது மேல்விலாசத்தை அறிந்துகொள்ளாமல் வந்து விட்டோமே என்னும் விசனமும் அவருக்கு உண்டாக சந்தர்ப்பம் ஏற்படாமல் போய்விட்டது. அவர் அடுத்த வண்டியில் ஏறி மறுநாள் சென்னைக்கு வந்து ஏழையிலும் பரம ஏழையாகத் தமது வீட்டை யடைந்தார். கடற்கரை பங்களாவில் கமலத்துடனிருந்து சுவர்க்கபோக மதுபவிக்காவிடினும், தமது சொந்த வீட்டையடைந்து மீனாக்ஷி யம்மாளையாகிலும் கண்டு தமது பழைய சுகமான அற்ப சுகத்தையேனும் அடைய மாட்டோமா வென்று அவர் ஏங்கி வந்தவராதலின், அவரது பழைய நிலைமையே அவருக்கு அப்போது பரமபதமாகத் தோன்றியது. என்றாலும், வெட்கம் ஒரு புறம் வதைத்தது; துக்கம் இன்னொரு புறம் வருத்தியது. அழுகை நெஞ்சை அடைத்தது. நெடுநாட்களாக எவ்வளவோ பாடுபட்டு, மூடர்களான பெருந்தேவியம்மாள் முதலியோரை வஞ்சித்து அபகரித்த பெருத்த பொருள் ஒரு நிமிஷத்தில் கனவைப்போல மறைந்து போனதைப்பற்றி நினைத்து நினைத்து ஐயர் ஒலமிட்டு அழுதவராய், மூடி முக்காடிட்டு ஒரு மூலையில் படுத்தவர் மறுபடி எழுந்திருக்க இரண்டு நாளாயின. அந்த இரண்டு நாட்களுக்கு அவர் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினார்; புரண்டார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/197&oldid=1252356" இலிருந்து மீள்விக்கப்பட்டது