பக்கம்:மேனகா 2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

மேனகா


சப் ரிஜிஸ்டிரார்:- சரி; அங்கே சேவகரிடம் போய் கையெழுத்துப் போடுங்கள்; போங்கள் - என்று அனுப்பி விட்டுப் பத்திரத்தில் தமது கையெழுத்தைச் செய்து சேவகனிடம் விசிறிப்போட்டார். பதிவுக்கட்டணம் உடனே வசூலிக்கப்பட்டது. மரைக்காயர், செட்டியார், ஐயர் மூவரும், ஒரு மூலையில் போடப்பட்டிருந்த மேஜைக்கருகில் நின்ற சேவகனிடம் சென்றனர். அவன் பத்திரத்தின் பின்புறத்தில் அவர்களது கையெழுத்து முதலிய விவரங்களை எழுதச் செய்ததன்றி, அவர்களது பெருவிரல் ரேகை அடையாளத்தையும் அழுத்தச் செய்தான். அப்போது சாமாவையர் ஒரு தந்திரம் செய்தார்; தகப்பனார் பெயரையும் போட்டுவிட்டார். அதாவது, மகாலிங்கையர் பிள்ளை சாமாவையர் என்பதற்குப் பதிலாக, சாமாவையர் பிள்ளை மகாலிங்கையர் என்று போட்டு விட்டார். ஏனெனில், பிறகு அந்தப் பொய்ப்பத்திரம் தயாரித்த விஷயமாக ஏதேனும் நேர்ந்தால், சாட்சியாக வந்தவர் தாம் அல்ல வென்று சொல்லிவிட, அந்தத் தந்திரம் செய்தார். அதை எவரும் கவனிக்கவில்லை. கால் நாழிகையில் பத்திரப் பதிவின் சடங்குகள் நிறைவேறின. பத்திரம் பெருந்தேவியம்மாளிடம் கொடுக்கப்படவேண்டு மென்று மரைக்காயர் எழுதி வைத்தார். அது மறுநாள் காலையில் கொடுக்கப் படுமென்று சப் ரிஜிஸ்டிரார் சொல்ல, அதைக்கேட்டுக் கொண்ட அம்மூவரும் உடனே வெளிப்பட்டனர். அதுகாறும், வெளியில் நின்று, நிகழ்ந்தனவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த பெருந்தேவியம்மாள், தான் பெருத்த பங்களாவிற்கு எஜமானியானதைப்பற்றி நினைத்துப் பெருமகிழ்வும் பெருமையும் பூரிப்பும் அடைந்தாள்; நால்வரும் கச்சேரியின் கட்டிடத்தை விட்டு வெளியிலிருந்த பாட்டைக்கு வந்தனர். அடுத்த பத்திரத்திற்கு சாட்சி சொல்ல, செட்டியார் போகவேண்டியிருந்ததால், சாமாவையரால் கொடுக்கப்பட்ட எட்டணாவை வாங்கிக்கொண்டு செட்டியார் கச்சேரிக்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/205&oldid=1252378" இலிருந்து மீள்விக்கப்பட்டது