பக்கம்:மேனகா 2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

மேனகா

சாம்பசிவந்தான் வந்துவிட்டாரோ வென்று திடுக்கிட்டுத் திரும்பிநோக்குவாள்; கோவில் களிலுள்ள தெய்வங்களை எல்லாம் மனதால் வணங்கி வாயால் துதித்துக் கைகூப்பி வேண்டினாள்; தங்களது குலதெய்வமான திருப்பதி ஸ்ரீ நிவாசப் பெருமாளை நினைத்தாள், நிமிஷத்திற்கு நிமிஷம், ஒவ்வொரு வகையான புதிய காணிக்கை செலுத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்வாள்; “ஸ்ரீ நிவாசப் பெருமாளே! வெங்கடாசலபதி இன்னமும் உன் மனது இறங்கவில்லையா! இந்த ஏழைகள் படும்பாடு உனக்குத் தெரியவில்லையா! ஐயோ எங்களால் சகிக்கக்கூடவில்லையே! போதுமப்பா! தெய்வமே இனியாகிலும் உன்னுடைய கருணாகடாக்ஷம் எங்களுக்கு உண்டாகாதா! முதலில் இந்த டாக்டருடைய மனசில் புகுந்து என் நாட்டுப் பெண்ணின் உயிரைக் கொடுக்கமாட்டாயா! இவள் பிழைத்தவுடன், அழைத்துவந்து உன் கோவிலில் அங்கப் பிரதக்ஷணம் செய்து வைக்கிறேன். மாவிளக்கேற்றுகிறேன். இவளைப் போல தங்கத்தினால் சிலை செய்து கொண்டுவந்து வைக்கிறேன்; இவளுக்குக் குழந்தை பிறந்தால் அதற்கு உன்னுடைய கோவிலில் முடி இறக்குகிறேன். அப்பா வெங்கடாஜலபதி! ஸ்ரீ நிவாசப் பெருமாளே! அநாதையான எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு உன் துணையன்றி வேறு துணையில்லையப்பா! ஏ கிருபாநிதி! தயாநிதி! கருணாநிதி! எவ்விதமான சூதையும் கபடத்தையும் அறியாத என்னுடைய பையனுக்கு எவ்வித ஆபத்துமில்லாமல் கொண்டு வந்து சேர்த்துவிடப்பனே!” என்று பலவாறு வேண்டுதல் செய்து கொண்டாள். தஞ்சைக்கு அருகிலுள்ள மாரியம்மன் கோவிலென்னும் ஊரிலுள்ள வரப்பிரசாதியான மாரியம்மனை நினைத்து வேண்டினாள்; “மாரியம்மாத்தாயே! ஆயிரங் கண்ணுடைய என்னம்மணீ! பரதேவதை என் வீட்டு விளக்கை அவித்துவிடாதே தாயே! உன் கோவில் முழுவதும் லட்ச தீபம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/219&oldid=1252798" இலிருந்து மீள்விக்கப்பட்டது