பக்கம்:மேனகா 2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

மேனகா

வைத்திய சாலைக்குப் போய் வராகசாமியின் நிலையை அறிந்து வரும்படி கிட்டனை அடிக்கடி அனுப்புவாள். வராகசாமி முழங்காலில் ஆபரேஷன் செய்து தனிமையான அறையில் விடப்பட்டிருந்தமையால் அவனைப் பார்க்க அநுமதி கிடைக்கவில்லை யென்பதைத் தெரிவிப்பான் கிட்டன். அதிலிருந்து வராகசாமி உயிரோடு இருக்கிறான் என்பதை யூகித்துக்கொண்டு கனகம்மாள் சிறிது ஆறுதலடைவாள், தொளசிங்கப்பெருமாள் கோவில் தெருவிலிருந்த சாமாவையரிடம் சென்று மேனகாவைப்பற்றிய செய்தி ஏதேனும் கிடைத்ததா வென்பதை அறிந்து வரும்படி கிட்டனை அனுப்புவாள். அவன் அரை நாழிகையில் திரும்பி வந்து, அவளைப்பற்றி எவ்விதமான செய்தியும் கிடைக்க வில்லை யென்பான்.

அதைக் கேட்டவுடன் கனகம்மாள் பழைய பாட்டைத் துவக்குவாள். “ஐயோ! என் குடும்பம் இப்படியா சீர்குலைந்து போகவேண்டும், நாங்கள் யார் குடியைக் கெடுத்தோமோ! யார் சொத்தை அபகரித்தோமோ! யாரை அடித்து சித்தரவதை செய்தோமோ! அத்தனை பாவங்களும் ஒன்றாகச் சேர்ந்து வந்து ஒரே காலத்தில் அமுக்கி விட்டனவே! ஐயோ! தெய்வமே! இத்தனை ஆபத்துகளிலிருந்தும் நாங்கள் எப்படி மீளப் போகிறோம்! என் பிள்ளை வரவேண்டுமே; என் மேனகா வரவேண்டுமே; என் தங்கம் பிழைக்கவேண்டுமே; என் வராகசாமி பிழைக்கவேண்டுமே; என் மேனகா புருஷனோடு வாழ வேண்டுமே; போன உத்தியோகமும் மானமும் திரும்ப வேண்டுமே; இத்தனையும் கைகூடுமோ? இத்தனையும் மனித சகாயத்தால் ஆகக்கூடியவைகளோ? ஜெகதீசா! ஜெகத்ரக்ஷகா! ஸ்ரீ நிவாசா! மலைப்பெருமாளே! உன் கிருபை எங்களுக்கு உண்டாகுமோ? உன் கடாக்ஷம் எங்கள் மீது விழுமோ? நாங்கள் செய்த பிழைகளுக்கு இன்னம் தண்டனை முடிவடைய வில்லையோ? அற்பமான ஒரு கொசுவின் தலையில் மலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/221&oldid=1252799" இலிருந்து மீள்விக்கப்பட்டது